பல கலாசாரங்கள் கொண்ட சமுதாயம் ஒரு பாத்திக் வேலைப்பாடுபோல் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்க வேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
பாத்திக் வேலைப்பாடை எடுத்துக்காட்டாகக் கூறி பன்முகக் கலாசாரம் குறித்து விளக்கினார் அதிபர் தர்மன்.
ஆனால் தற்போது பல சமூகங்கள் பன்முகத் தன்மை கொண்ட கலாசாரங்களை ஆடைகளில் உள்ள வெவ்வேறு வேலைப்பாடுகள்போலப் பார்க்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
ஓர் ஆடையில் உள்ள வெவ்வேறு வேலைப்பாடுகள், நாளாக நாளாக ஆடையிலிருந்து விலகத் தொடங்கும். அதுபோல்தான் கடினமான காலங்களில் சமூகத்தில் உள்ள கலாசாரங்களும் விலக நேரிடலாம் என்றார் அதிபர் தர்மன்.
ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நடக்கும் ஒன்றுபட்ட சமுதாயத்திற்கான அனைத்துலக மாநாட்டில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) பேசியபோது இக்கருத்தை அதிபர் தர்மன் கூறினார்.
மூன்று நாள் நடக்கும் ஒன்றுபட்ட சமுதாயத்திற்கான அனைத்துலக மாநாட்டில் கலந்துகொண்டவர்களும் பாத்திக் ஆடைகளை அணிந்து வந்து நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தனர்.
“ஓர் ஆடையில் பல நிறத்தில் நூல்கள் இருக்கும், அதை நெசவு செய்யும்போது பலரின் கைப்பக்குவங்கள் இடம்பெற்றுச் சிறந்த படைப்பாக மாறும், அதுபோல்தான் ஒரு நாடும் பலரின் கைவண்ணத்தாலும் வரலாற்றாலும் சிறப்பாக உருமாறும்,” என்று அதிபர் தர்மன் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் 1,000க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டார்கள்.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்க அதிகாரிகள், 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்த இளம் தலைவர்கள் உள்ளிட்டவர்களும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
மாநாட்டை எஸ். ராஜரத்னம் அனைத்துலக ஆய்வுக் கழகம் ஏற்பாடு செய்தது. அதற்குக் கலாசார, சமூக இளையர்துறை அமைச்சு ஆதரவு வழங்கியது.
இந்த மாநாடு 2019ஆம் ஆண்டு முதல்முறையாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

