உணவுக் கடையில் தவறுதலாகச் செலுத்திய $650யைத் திரும்ப பெற்ற வாடிக்கையாளர்

உணவுக் கடையில் தவறுதலாகச் செலுத்திய $650யைத் திரும்ப பெற்ற வாடிக்கையாளர்

1 mins read
c4fa83f5-39b4-4a01-a3c9-e1abf611042b
புக்கிட் பெர்மாய் சாலையின் புளோக் 109ல் உள்ள ‘காய் ஃபா சிக்னேச்சர் லோர் மீ’ கடையில் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட $650யை (வலது) உரிமையாளர் 48 வயது வின்சென்ட் சீ திரும்பக் கொடுத்தார். - படம்: ‌ஷின்மின்
Google News Preferred Icon

புக்கிட் பெர்மாய் வட்டாரத்தில் உள்ள நூடுல்ஸ் கடை உரிமையாளர், கூடுதலாகப் பெறப்பட்ட கட்டணத்தை ஒரு மாதத்துக்குப்பின் வாடிக்கையாளரிடம் திரும்பக் கொடுத்துள்ளார்.

புக்கிட் பெர்மாய் சாலையின் புளோக் 109ல் உள்ள ‘காய் ஃபா சிக்னேச்சர் லோர் மீ’ கடையிலிருந்து உணவு வாங்கிய வாடிக்கையாளர் $6.50க்குப் பதிலாக $650யை மின்கட்டணம் மூலம் செலுத்திவிட்டார்.

அதுகுறித்து அந்த வாடிக்கையாளரும் அறிந்திருக்கவில்லை என்று கடை உரிமையாளர் 48 வயது வின்சென்ட் சீ கூறினார்.

கடையை மூடிய பிறகு கணக்கு வழக்குகளைச் சரிபார்த்தபோதுதான் $6.50க்குப் பதிலாக $650 கட்டணம் பெறப்பட்டது குறித்து சீ அறிந்துகொண்டார்.

ஆனால், நாள் ஒன்றுக்கு ஏராளமான வாடிக்கையாளர்களைச் சந்திக்கும் சீக்கு எந்த வாடிக்கையாளர் அவ்வளவு பெரிய தொகையைச் செலுத்திச் சென்றார் என்பதை நினைவுகூர முடியவில்லை.

கூடுதலாகக் கிடைத்த கட்டணம் குறித்து சீ வங்கியைத் தொடர்புகொண்டு சூழலை விளக்கினார்.

வாடிக்கையாளர் ஒருவேளை வங்கியைத் தொடர்புகொண்டால் தாம் அந்தத் தொகையைத் திரும்பக்கொடுக்க முயல்கிறார் என்பதை அவரால் அறிந்துகொள்ள முடியும் என்று சீ நினைத்தார்.

அதையடுத்து கிட்டத்தட்ட மூன்றிலிருந்து நான்கு வாரங்கள் கழித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் சீயின் கடைக்குத் திரும்பினார்.

தாம் வெளிநாடு சென்றிருந்ததாகவும் $650 கணக்கிலிருந்து காணவில்லை என்பதை அண்மையில்தான் கவனித்ததாகவும் அந்த ஆடவர் தெரிவித்தார்.

ஆடவரின் விவரங்கள் அனைத்தையும் சரிபார்த்த பிறகு சீ உணவுக்கான தொகையைக் கழித்துவிட்டு $643.50யை அவரிடம் திரும்ப கொடுத்தார்.

குறிப்புச் சொற்கள்
உணவுக் கடைபணம்வாடிக்கையாளர்