சான் பிரான்சிஸ்கோ: திறந்தவழி செயற்கை நுண்ணறிவால் ‘பிளாக்செயின்’ தொழில்நுட்பத்தில் தீங்கிழைக்கும் மென்பொருள்களை மறைப்பது எளிதாகியுள்ளது.
இதனால் மின்னிலக்க நாணயத் துறையில் இணையக் குற்றங்கள் பெருமளவு அதிகரித்துள்ளன.
ஓராண்டுக்குக் குறைவான காலத்தில் பிளாக்செயின் பரிவர்த்தனைகள் மூலம் இத்தகைய தாக்குதல்கள் 440 விழுக்காடு உயர்ந்துள்ளன.
நாள் ஒன்றுக்குச் சராசரியாக 11 சம்பவங்கள் நடப்பதாக ‘செயினாலிசிஸ்’ நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கட்டுப்பாடுகள் இல்லாத சீனாவின் திறந்தவழி செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் வெளியாயின. அதன்பிறகு குற்றங்கள் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
சீனாவின் திறந்தவழி செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் வெளியாவதற்கு முன்னர், நாள் ஒன்றுக்குச் சராசரியாக இரண்டு மின்னிலக்க நாணயச் சம்பவங்கள் மட்டுமே நடந்தன.
கணினி அல்லது இணையக் கட்டமைப்பிற்குள் தீங்கிழைக்கும் மென்பொருளை ஊடுருவச் செய்து தகவல்கள், கடவுச்சொற்கள் அல்லது நிதியைத் திருடுவது இணையத் தாக்குதல் என்று அறியப்படுகிறது.
இந்தத் தாக்குதல்களில் இணைய ஊடுருவிகள் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மென்பொருளுக்கான கட்டளைகளை விட்டுச் செல்கின்றனர்.
இது ‘blockchain dead drop’ என்று அழைக்கப்படுகிறது.
பிளாக்செயினில் பதிவான தகவல்களை எளிதில் அழிக்க முடியாது என்பதால், இத்தகைய தாக்குதல்களைத் தடுப்பது மிகவும் கடினம்.
இணையக் கட்டமைப்புகளை வாடகைக்கு எடுப்பது அல்லது கட்டணம் செலுத்துவது போன்ற வழக்கமான செயல்களால் தங்களின் விவரங்கள் அதிகாரிகளுக்குத் தெரிந்துவிடும் என்பதால், வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளின் ஆதரவு பெற்ற குழுக்கள் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துகின்றன.
மேலும், மின்னிலக்க நாணயத் துறையில் 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் இணைய ஊடுருவல் சம்பவங்கள் கிட்டத்தட்ட150 விழுக்காடு உயர்ந்து 207ஐத் தொட்டுள்ளது.
புதிய திறந்தவழி செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் இணைய ஊடுருவிகளுக்குப் பேரளவில் தாக்குதல்களை நடத்த உதவுகின்றன. என்றாலும், பிளாக்செயினில் பதிவாகும் தகவல்கள் நிரந்தரமானவை.
எனவே, தாக்குதல் நடத்தியவர்களின் உள்கட்டமைப்பைக் கண்டறியவும், இணையக் குற்றங்களை இணைத்துப் பார்க்கவும் இது புலனாய்வாளர்களுக்கு உதவுகிறது என்று செயினாலிசிஸ் அறிக்கை குறிப்பிட்டது.
