ஓர் இணையத்தளம், தொலைபேசி எண் அல்லது சமூக ஊடகப் பக்கம் மோசடியுடன் தொடர்புடையதாக இருந்தால், காவல்துறையின் இணையத் தளபத்தியப் (Cyber Command) பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஒரு சில நிமிடங்களில் அதனை முடக்கிவிட முடியும்.
இதற்கு முன்னர் அந்தச் செயல்முறைக்கு பல மணிநேரம் தேவைப்பட்டது. ஏனெனில், இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் சிங்கப்பூர்க் காவல்துறையின் பல பிரிவுகளுடன் இணைந்து செயல்பட வேண்டியிருந்தது.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் இணையத் தளபத்தியப் பிரிவு தொடங்கப்பட்டு அந்தச் செயல்முறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. இதனால், அதிகாரிகளால் வேகமாகச் செயல்படமுடிந்தது.
கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 16) ஊடகங்களிடம் பேசிய இணையத் தளபத்தியப் பிரிவு அதிகாரிகளில் 22 வயதான முழுநேர தேசியச் சேவையாளரும் இணையக் குற்றப் பிரிவின் ஊழியருமான லாவும் ஒருவர்.
“ஒரு தளம் குறித்து புகாரளிக்கப்படும்போது அது தீங்கிழைக்கக்கூடியதா என்பதை எங்கள் குழுவினர் மதிப்பீடு செய்வர். சோதனைக்குப் பிறகு அந்த இணையத்தளங்களை முடக்குவதற்குத் தேவையான மேல்நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போம்,” என்று அவர் கூறினார்.
“குறிப்பாக, ஒரு புதிய மோசடி அரங்கேறும்போது நாங்கள் விரைந்து செயல்பட வேண்டியிருக்கும். அதே நேரத்தில், ஒவ்வொரு சம்பவமும் முழுமையாக மதிப்பீடு செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்,” என்று லாவ் சொன்னார்.
2026ஆம் ஆண்டின் முற்பாதியில் மட்டும் 47,000க்கும் மேற்பட்ட மோசடி தொடர்பான கைப்பேசி எண்கள், 37,500 வாட்ஸ்அப் எண்கள், 31,600 இணையப் பொய் அடையாளங்கள், 52,200 தீங்கிழைக்கும் இணையத்தளங்களை காவல்துறை முடக்கியுள்ளது.
பொதுவான மோசடிப் போக்குகள் குறித்துக் கேட்டபோது, “மோசடிக்காரர்கள் பெரும்பாலும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சிஎன்ஏ உள்ளிட்ட செய்தி நிறுவனங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து, முதலீட்டுத் திட்டங்கள், மின்னிலக்க நாணயத் தளங்களை விளம்பரப்படுத்தி விவரங்களைத் திருட முயல்கின்றனர்,” என்று லாவ் கூறினார்
அதுபோன்ற போலி இணையப் பக்கங்களை முடக்குவதில் வேகமாக செயல்பட வேண்டும் என்றும் இல்லையெனில் பலர் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் இவ்வாண்டு முற்பாதியில் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் $410.6 மில்லியனை இழந்துவிட்டனர்.
அத்துடன், 2019ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் மோசடிகளால் $4 பில்லியனுக்கும் அதிகமான பணம் பறிபோயுள்ளது.
