சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முக்கிய உள்கட்டமைப்புத் தற்காப்புப் பயிற்சியில் சிங்கப்பூரின் 26 தேசிய நிறுவனங்களைச் சேர்ந்த இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இரண்டாவது முறையாக இடம்பெற்ற இப்பயிற்சி, நவம்பர் 22, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்த மூன்று நாள் பயிற்சியில் சாங்கி விமான நிலையக் குழுமம், பொதுப் பயனீட்டுக் கழகம், செனோக்கோ எனர்ஜி, சிங்டெல் போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த 200க்கு மேற்பட்ட இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பும் சிங்கப்பூர் ஆயுதப்படையின் மின்னிலக்க, புலனாய்வுச் சேவையும் இணைந்து இந்தப் பயிற்சியை அளித்தன.
முக்கியமான உள்கட்டமைப்புகள்மீது தாக்குதல் நடந்தால் இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று பாவனைக் காட்சியமைப்புகளுடன் பயிற்சி அளிக்கப்பட்டது.
தகவல், தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம், தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு, சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு, ஆயுதப்படையின் மின்னிலக்க, புலனாய்வுச் சேவை ஆகியவற்றின் அதிகாரிகள், இணையக் குற்றக் குழுக்களின் உத்திகளைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சிக்கான பாவனைக் காட்சிகளை உருவாக்கினர்.
மின்சாரம், தண்ணீர் விநியோகம், தொலைத்தொடர்பு, விமானப் போக்குவரத்து போன்ற முக்கிய தகவல் உள்கட்டமைப்பைக் கொண்டுள்ள துறைகளில் சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதே இந்த பாவனைப் பயிற்சியின் முதன்மை நோக்கம் என்று கூறப்பட்டது.
நாட்டில் இணையத் தாக்குதல் நடைபெற்றால் நிலைமை எப்படி இருக்கும் என்ற அனுபவத்தை அந்தத் துறைகளின் அதிகாரிகள் பெற இது உதவும்.
இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் தேவைப்பட்டதாகவும் இதற்காக மெய்நிகர் வடிவம் உட்பட ஏறக்குறைய1,000 அமைப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.