இணையப் பாதுகாப்பு ஆணையாளர்: சிங்கப்பூரின் பலவீனங்கள், மற்ற நாடுகளைக் காட்டிலும் மாறுபட்டதல்ல

2 mins read
6139455c-8937-4094-a69b-56303f67927a
சிங்கப்பூரின் முதல் இணையப் பாதுகாப்பு ஆணையாளராக உள்ள டேவின் கோ, இணைய மிரட்டல்களையும் சம்பவங்களையும் விசாரிப்பதற்கான சட்டபூர்வ அதிகாரத்தைப் பெற்றுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புவிசார் அரசியல் பூசல்களுக்கு இடையே இணைய மிரட்டல்கள் உயர்ந்தன. சிங்கப்பூர் போன்ற நாடுகளைக் கட்டாயப்படுத்தி நடவடிக்கை எடுக்கவும் எடுக்காமல் இருக்கவும் சில நாடுகள் நெருக்குதல் அளித்து வருகின்றன.

இணைய அபாயங்களைப் பொறுத்தவரையில் சிங்கப்பூரின் பலவீனங்கள், வேறு எந்த நாட்டின் பலவீனங்களையும் காட்டிலும் மாறுபட்டதல்ல என சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாகி டேவின் கோ எச்சரித்தார்.

“ரயில் கட்டமைப்புகள், மின்சக்தி ஆலைகள், நீர்க் கட்டமைப்புகள் ஆகியவற்றுக்கு இடையூறு ஏற்படலாம். புதிய பரிமாணத்திற்கு இது கொண்டு செல்லப்படும். நம்மை எல்லாம் பாதிக்கும் நிஜ உலகப் பாதிப்புகளை நீங்கள் சந்திக்கலாம்,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரின் முதல் இணையப் பாதுகாப்பு ஆணையாளராக உள்ள திரு கோ, இணைய மிரட்டல்களையும் சம்பவங்களையும் விசாரிப்பதற்கான சட்டபூர்வ அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.

“நாங்கள் முதன்முதலாகத் தொடங்கியபோது, மிரட்டல்களில் பெரும்பாலானவை நேரடியாக இருந்தன. இணையத்தள தோற்றத்தைக் கெடுக்கும் நாசவேலை (web face defacements), வெவ்வேறு தனிநபர் கணினிகளிலிருந்து தரவுகளை அனுப்பி கணினிக் கட்டமைப்பைப் பாழ்படுத்தும் டிடோஸ் (DDoS) தாக்குதல்கள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்,” என்று ஆயுதப்படைகளில் முன்னதாக தற்காப்பு நிபுணராகப் பணியாற்றிய திரு கோ கூறினார்.

சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு அமைப்பு, வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தனது 10 ஆம் நிறைவாண்டைக் கொண்டாடியுள்ளது. இணைய வசதிகள் வழியாகப் பொருளியலில் இணைப்புகள் அதிகரித்துவர, இந்த மிரட்டல்களின் சிக்கல்தன்மை கூடியுள்ளது. இதனால், சாமானியர்களைப் பாதுகாப்பதற்காக அந்த அமைப்பு கூடுதலாகப் பொறுப்பேற்றுக்கொண்டது.

2024ல் அந்த அமைப்பு, கூகலுடன் இணைந்து கூகல் பிளே ப்ரோட்டெக்ட் என்ற மென்பொருளை உருவாக்கியது. அது, வன்மமிகு செயலிகளை முடக்க வல்லது. பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு கூகல் இதனை அறிமுகம் செய்துள்ளது. இத்தகைய பங்காளித்துவம் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கனவாகத்தான் இருந்திருக்கும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்