சிங்கப்பூர் ஆயுதப்படையின் மருத்துவ வகைப்பாட்டு முறை மறுஆய்வு

சிங்கப்பூர் ஆயுதப்படையின் மருத்துவ வகைப்பாட்டு முறை மறுஆய்வு

2 mins read
74da8766-9cc3-425f-a251-0ad4086ad848
சிங்கப்பூர் ஆயுதப் படையின் இணையத் தற்காப்புச் சோதனை, மதிப்பீட்டு நிலையம் பெயர் மாற்றம் காண்கிறது. அது இனி இணையத் தற்காப்புச் சோதனை, செயல்முறை ஆய்வு நிலையம் என அழைக்கப்படும். - படம்: தற்காப்பு அமைச்சு

சிங்கப்பூர் ஆயுதப்படை, அதன் மருத்துவ வகைப்பாட்டு முறையை மறுஆய்வு செய்து தேசியச் சேவையாளர்களின் மருத்துவத் தகுதி, செயல்பாட்டுத் திறனை மிகவும் துல்லியமாகவும் சிறந்த முறையிலும் வகைப்படுத்தவிருக்கிறது.

தேசியச் சேவையாளர்கள் மிகவும் அர்த்தமுள்ள, திறம்பட்ட வகையில் செயல்பட இந்த மறுஆய்வு உதவும் என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது தெரிவித்தார்.

“தேசியச் சேவையாளர்கள் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர்களின் உடல்நிலைக்குப் பொருத்தமான பணிகளில் மட்டுமே அமர்த்தப்படுவதை இது உறுதி செய்கிறது,” என்றார் அவர்.

முன்னர் தகுதிபெறாத பிரிவுகளுக்கு இப்போது சேவையாளர்கள் பணியமர்த்தப்படலாம் என்றும் திரு சான் சொன்னார்.

2021ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் ஆயுதப்படை 25 பிரிவுகளில் 2,000 பணிகளை மறுவடிவமைத்துள்ளது.

அதனால் இதற்குமுன் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்ட 1,800க்கும் மேற்பட்ட முழுநேர தேசியச் சேவையாளர்கள் தற்போது பரந்த அளவிலான பணிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பொது மருத்துவ நிபுணர்கள், ஆயுதப்படையின் சிறப்பு ஆலோசனைக் குழுவினருடன் கலந்தாலோசித்து, மருத்துவ வகைப்பாட்டு முறை மறுஆய்வு செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டார் திரு சான்.

மதிப்பாய்வு செய்யப்பட்ட மருத்துவ வகைப்பாட்டு முறை தொடர்பான கூடுதல் தகவல்கள் இவ்வாண்டு (2026) பகிரப்படும்.

இணையத் தற்காப்புச் சோதனை, மதிப்பீட்டு நிலையம்

சிங்கப்பூர் ஆயுதப் படையின் இணையத் தற்காப்புச் சோதனை, மதிப்பீட்டு நிலையம் இனி இணையத் தற்காப்புச் சோதனை, செயல்முறை ஆய்வு நிலையமாக மாற்றப்படும்.

இணையத் தற்காப்பை வலுப்படுத்துவதற்கும் நிலையம் அதிநவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் என்று அமைச்சர் சான் தெரிவித்தார்.

“அதிவேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பம், தினமும் சந்திக்கும் அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப நாம் நம் வேகத்தை அதிகரிக்க வேண்டும்,” என்றார் திரு சான்.

சிங்கப்பூர் ஆயுதப்படை தொடர்ந்து எதிர்காலத்தில் வரக்கூடிய அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு திறன்களில் முதலீடு செய்யும் என்று அவர் உறுதியளித்தார்.

தயார் நிலையில் உள்ள இணைய நிபுணத்துவம் பெற்ற தேசியச் சேவையாளர்கள், இணையத் தற்காப்புக் குழுக்களில் வரும் ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்படுவர் என்றும் மன்றத்தில் தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.

சிங்கப்பூரின் முக்கியத் தகவல் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதில் சிங்கப்பூர் இணையத் தற்காப்பு அமைப்பை ஆதரிக்க தேசியச் சேவையாளர்கள் உதவுவார்கள் என்றார் அவர்.

“தொலைத்தொடர்பு, மின்சாரம், போக்குவரத்து போன்ற முக்கியத் துறைகள் இதில் அடங்கும்,” என்று திரு ஸாக்கி முகம்மது குறிப்பிட்டார்.

பொருத்தமான திறமைகள் பெற்ற தேசியச் சேவையாளர்கள், மேம்படுத்தப்பட்ட வல்லுநர் நியமனத் திட்டம் மூலம் மின்னிலக்க, உளவுத்துறைப் படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்