ஈசூனில் புதன்கிழமை மாலை நேர்ந்த சாலை விபத்தில் 18 வயது சைக்கிளோட்டி ஒருவர் மாண்டார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ அதிகாரி சம்பவ இடத்திலேயே அவரின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்கு 37 வயது பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈசூன் அவென்யூ 2க்கும் ஈசூன் ரிங் ரோட்டுக்கும் அருகில் உள்ள சாலை சந்திப்பில் மாலை ஆறு மணி வாக்கில் விபத்து நேர்ந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பேருந்துக்குப் பின்னால் மாண்டவரின் சடலம் நீல நிறத் துணியால் மூடப்பட்டிருந்ததை இணையத்தில் வெளியான புகைப்படங்கள் காட்டின. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ அதிகாரிகள் பேருந்து ஓட்டுநரைக் கவனிப்பதை மற்றொரு புகைப்படத்தில் காணமுடிந்தது.
விசாரணை தொடர்வதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.