ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மெதுவோட்டத்தில் ஈடுபட்டு இருந்த பெண்மீது சைக்கிள் மோதிய சம்பவம் தொடர்பாக 34 வயது சைக்கிளோட்டிமீது வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட உள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதி காலையில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
சைக்கிள் மோதியதால் அந்தப் பெண்ணுக்குத் தலையிலும் வலது முழங்கையிலும் காயங்கள் ஏற்பட்டதாகக் காவல்துறை கூறியது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவோடு இருந்தார்.
ஆடவர் பொறுப்பற்ற முறையில் தாறுமாறாக சைக்கிளை ஓட்டிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
கடுமையான காயத்தை ஏற்படுத்தும் வகையில் கண்மூடித்தனமாக நடந்துகொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட உள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான்காண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் ஆடவருக்கு விதிக்கப்படலாம்.
ஆறு பேர் சிக்கினர்
இதனிடையே, பல்வேறு வாகனக் குற்றங்களுக்காக ஆறு ஆடவர்கள் பிடிபட்டு உள்ளனர். அவர்கள் 16 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
தெம்பனிஸ் மால், செஞ்சுரி ஸ்குவேர் கடைத்தொகுதிகளைச் சுற்றிலும் டிசம்பர் 17, 18 தேதிகளில் சோதனை நடத்தப்பட்டபோது அவர்கள் சிக்கினர். பிடோக் காவல்துறை பிரிவு, நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள் அந்தச் சோதனையை நடத்தினர்.
மின்சைக்கிளையும் மோட்டார்சைக்கிளையும் நடைபாதையில் ஓட்டியது, வாகனங்களைச் சட்டவிரோதமாக மாற்றி அமைத்தது போன்ற குற்றங்களில் அவர்கள் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மின்சைக்கிள் ஒன்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.