சிங்கப்பூரில் சென்ற ஆண்டு சைக்கிளில் போக்குவரத்துச் சந்திப்பைக் கடந்துசென்றபோது, சரியாகக் கவனிக்காமல் மூத்த பாதசாரிமீது மோதி, அவருக்கு மரணம் விளைவித்ததாக ஆடவர் ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கவனக்குறைவாகச் செயல்பட்டு, அந்த 70 வயது ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக லெஸ்டர் லு சு மின், 49, மீது புதன்கிழமை (ஜூலை 23) குற்றஞ்சாட்டப்பட்டது.
சென்ற ஆண்டு மார்ச் 6ம் தேதி காலை 6.30 மணிக்குப் பிறகு, ஜாலான் அனாக் புக்கிட்டை நோக்கிச் செல்லும் அப்பர் புக்கிட் தீமா சாலை வழியாக லு சைக்கிளோட்டிக் கொண்டிருந்தபோது சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
சரியாகக் கவனிக்கத் தவறியதாகவும் பாதசாரி கடக்கும் பாதையில் மூத்த பாதசாரியை மோதியதாகவும் லு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லுவின் வழக்கு வியாழக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.
கவனமின்றிச் செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்தியதற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.