தன் காரை அப்பர் புக்கிட் தீமாவில் அமைந்துள்ள கூட்டுரிமை வீட்டு நீச்சல் குளத்திற்குள் ஓட்டிய 67 வயது சியன் டக் ஹெங் மீது ஜூன் 28ஆம் தேதியன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதன் தொடர்பிலான குற்றச்சாட்டை அவர் எதிர்நோக்குகிறார்.
பிப்ரவரி 28ஆம் தேதியன்று இரவு 9 மணியளவில் ‘த ஹில்சைட் கொண்டோமினியம்’ நீச்சல் குளத்திற்குள் சியன் தன் வாகனத்தை ஓட்டியதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன. சம்பவத்தை அடுத்து சியனின் வெள்ளை நிற கார், நீச்சல் குளத்தில் பாதி மூழ்கியவாறு காணப்படும் படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
தான் ஒரு ‘கோஜெக்’ ஓட்டுநர் என்று கூட்டுரிமை வீட்டு பாதுகாவல் அதிகாரியிடம் தன்னை அறிமுகப்படுத்தியதாக முன்னதாக குறிப்பிடப்பட்டது.
சியனின் காரில் இருந்த 78 வயது திருவாட்டி வசந்தா குமரன், கூட்டுரிமை வீட்டில் வசித்து வந்த இருந்த தம் பேத்தியையும் மகளையும் பார்க்க வந்திருந்ததாக தமிழ் முரசு முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று குற்றத்தை அவர் ஒப்புக்கொள்ள இருப்பதாகவும் என்றும் வழக்கறிஞரை நியமிக்கப் போவதில்லை என்றும் சியன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இயந்திரத்தைக் கொண்டு மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு செயலைச் செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஓராண்டுவரை சிறைத்தண்டனை $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.