பாதை முயலானது; படம் பிரபலமானது

பாதை முயலானது; படம் பிரபலமானது

2 mins read
a9354736-dec9-4224-9684-5aea4a807480
முயல் வடிவிலான பாதையை வரைந்து, அதில் சைக்கிளோட்டி முடிப்பதற்கு சந்தனுக்கு (வெள்ளை டி-சட்டையில்) ஐந்து மணி நேரத்திற்குமேல் தேவைப்பட்டது. படங்கள்: ஃபேஸ்புக், சந்தன் -

சீனப் புத்தாண்டில் முயல் ஆண்டை வரவேற்கும் விதமாக சிங்கப்பூரில் புத்தாக்கமான நடவடிக்கையில் இறங்கினார் 42 வயது சந்தன்.

சீனப் புத்தாண்டின் மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை (ஜனவரி 24), முயல் வடிவிலான பாதையில் சைக்கிளோட்டினார் இவர்.

மற்ற சைக்கிள் பிரியர்களும் இந்தப் பாதையைப் பின்பற்ற, அதன் வரைபடத்தை இவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் பரவி வருகிறது.

இந்தப் பாதையில் தம்முடைய நண்பர் ஒருவருடன் சேர்ந்து சைக்கிளோட்டி முடிக்க சந்தன் எடுத்துக்கொண்ட நேரம் இரண்டு மணி நேரத்துக்கும் குறைவு என்று இவர் பயன்படுத்திய Strava செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனாலும், உண்மையிலேயே மொத்த பயணம் மூன்று மணி நேரத்துக்குமேல் ஆனதாக 'மஸ்ட் ஷேர் நியூஸ்' செய்தித் தளத்திடம் சந்தன் கூறினார். சைக்கிளோட்டப் பயணத்தின்போது இவர்களுக்குக் காத்திருந்த தடங்கலே இதற்குக் காரணம்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகள், பூங்காக்களுக்குள் புகுந்து துல்லியமாக சைக்கிளோட்டுவதற்கு இவர்களுக்கு நேரம் தேவைப்பட்டது.

இந்தப் பாதையை வரைய தாம் ஏறக்குறைய மூன்று மணி நேரம் எடுத்துக்கொண்டதாக சந்தன் சொன்னார். ஏனெனில், முயல் வடிவத்தை அமைப்பதற்கு சரியான சாலைகள், சுரங்கப்பாதைகள், பூங்கா இணைப்புப் பாதைகளைக் கண்டறிவது சவாலாக இருந்தது என்றார் இவர்.

இது முதல்முறையன்று

புத்தாக்க வடிவங்களில் சைக்கிளோட்டப் பாதைகளை வரைந்து அவற்றில் பயணம் மேற்கொள்வது சந்தனுக்கு இது புதிதன்று.

சிங்கப்பூரின் 57வது பிறந்தநாளைக் குறிக்கும் விதமாக, 'எஸ்ஜி57' வடிவிலான பாதையில் சைக்கிளில் தாம் பயணம் மேற்கொண்டிருந்ததாக இவர் சொன்னார்.

செய்தி: மஸ்ட் ஷேர் நியூஸ்