துப்பாக்கி சுடும் பயிற்சிக் களமருகே தோட்டா தாக்கி காயமடைந்த ஆடவர் தமது நண்பர்களுடன் சென்ற சைக்கிளோட்டப் பாதையை அதிகாரிகளிடம் தெரிவிக்க மறுத்திருக்கக்கூடும் என்று தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
துப்பாக்கித் தோட்டா தாக்கப்பட்டபோது அந்த 42 வயது ஆடவர் நீ சூன் நேரடி துப்பாக்கிப் பயிற்சிக் களம் அருகே சைக்கிளில் சென்ற தகவலை, ஆரம்பத்தில் காவல்துறையிடமும் தாம் அனுமதிக்கப்பட்ட தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையிடமும் மறைத்துவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் அறிகிறது.
எல் (L) என்று மட்டும் அடையாளம் காணப்பட்டு உள்ள சைக்கிளோட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) காலை 9.50 மணியளவில் செஸ்ட்நட் இயற்கைப் பூங்காவில் இருந்து சைக்கிளோட்டப் பாதைக்குள் நுழைந்ததை, அந்தச் செய்தித்தாள் சோதித்து அறிந்தது.
ஏறத்தாழ பத்து சைக்கிளோட்டிகளைக் கொண்ட குழுவில் அவர் இடம்பெற்று இருந்தார். குழுவில் டபிள்யூ (W) என்று அடையாளம் காணப்பட்டட ஒருவருடன் அவர் தொடர்ந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டு வந்தார்.
அந்த இருவரும் ஸ்ட்ராவா (Strava) என்னும் கைப்பேசிச் செயலியை சைக்கிளோட்ட வழிச் சோதனைக்குப் பயன்படுத்தினர்.
இருப்பினும் ஜூன் 15ஆம் தேதி சைக்கிளில் சென்ற விவரத்தை அந்தச் செயலியில் இருந்து ‘டபிள்யூ’ அழித்துவிட்டார். இருப்பினும், அந்நத விவரங்கள் அவரது கார்மின் (Garmin) கணக்கில் பதிவாகி உள்ளது. அது பொதுமக்கள் பார்வையிடக்கூடியது.
அப்பர் சிலேத்தார் நீர்த்தேக்கத்துக்கும் அப்பர் பியர்ஸ் நீர்த்தேக்கத்துக்கும் இடையிலுள்ள மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கை வனப்பகுதி துப்பாக்கிப் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூர் ஆயுதப் படை உண்மையான தோட்டாக்களைப் பயன்படுத்தி பயிற்சி செய்யக்கூடிய அந்த வட்டாரத்தில் சைக்கிளோட்டிகளும் மலையேறிகளும் நடமாடக்கூடாது என்ற அறிவிப்புப் பலகை உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஜூன் 15ஆம் தேதி ‘எல்’ அந்தப் பகுதிக்குள் சைக்கிளில் சென்றபோது அவர்மீது துப்பாக்கித் தோட்டா பாய்ந்தது. அப்போது நீ சூன் ரேஞ்சில் ஆயுதப் படை ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
ஆடவர் காயமடைந்த இடத்திலிருந்து அது கிட்டத்தட்ட 2.3 கிலோமீட்டர் தூரம்.
ஆடவரின் இடது கீழ் முதுகில் தோட்டா பாய்ந்தது. அவரது நண்பர்கள் அவரை உடனடியாக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக காவல்துறை தெரிவித்தது. இருப்பினும், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தோட்டா அகற்றப்பட்டதாகவும் ஆடவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் காவல்துறை கூறியது. அவரிடம் விசாரணை தொடருகிறது.

