பாதசாரியை மோதிய சைக்கிளோட்டிக்கு சிறை

1 mins read
4574dc38-ebcb-4712-8b28-4756066b0250
அரசாங்க வழக்கறிஞர், போக்குவரத்து சிவப்பு விளக்கு சமிக்ஞையை குற்றவாளி தெரிந்தே கடந்துசென்று பாதசாரியை மோதித்தள்ளியதாக தெரிவித்தார். - படம்: ஸ்:டரெய்ட்ஸ் டைம்ஸ்

சாலையை முறையாகக் கடந்து சென்றுகொண்டிருந்த பாதசாரியை எதிரே வந்த சைக்கிளோட்டி, போக்குவரத்து சிவப்பு விளக்கைக் கடந்து மோதினார். அதனால் காயமடைந்த அந்த 70 வயது பாதசாரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு பிறகு அங்கேயே மரணமடைந்தார்.

அந்த சம்பவம் 2024ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி காலை 5.30 மணியளவில் அப்பர் புக்கிட் தீமா ரோட்டின் ஒரு மூன்று சாலைகள் சந்திப்பில் நடந்தது. சைக்கிளோட்டியான 49 வயது லெஸ்டர் லு சு மின், தெரிந்தே சிவப்பு விளக்கைக் கடந்து அந்த பாதசாரியை மோதியதாக அரசு தரப்பு வழக்கறிஞர் இங் ஜுன் காய் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கவனமின்றி செயல்பட்டு மரணம் விளைவித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சைக்கிளோட்டிக்கு இரண்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தன் நண்பர் ஒருவருடன் கைக்கிளோட்டி வந்த லு, சாலைச் சந்திப்பில் சிவப்பு விளக்கு சமிக்ஞை இருந்தபோதும், அதனை மதிக்காமல் தொடர்ந்து சைக்கிளை ஓட்டி, சாலையைக் கடந்துகொண்டிருந்த முதியவரை மோதித் தள்ளினார்.

சைக்கிளின் வேக அளவு குறிப்பிடப்படவில்லை. சைக்கிள் மோதியதில் பாதசாரி தடுமாறி சாலையில் விழுந்து காயமடைந்தார். தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பாதசாரி அங்கேயே மரணமடைந்தார்.

ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட விவரங்களின்படி, இவ்வாண்டின் முதற்பாதியில் மட்டும் சாலை விபத்துகளில் 79 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் இது அதிகமாகும்.

குறிப்புச் சொற்கள்