$500,000 கோரி வழக்கு தொடுத்த சைக்கிளோட்டி: $55,000 கிடைத்தது

$500,000 கோரி வழக்கு தொடுத்த சைக்கிளோட்டி: $55,000 கிடைத்தது

2 mins read
நிக்கல் விரைவுச்சாலையில் நிகழ்ந்த விபத்தைத் தொடர்ந்து தொடுக்கப்பட்ட வழக்கு
f09b10ac-ef1d-44d1-b989-44ec57e56ec8
சைக்கிளோட்டி ஓர் இயன் மருத்துவர் என்று தெரிவிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த 2021ஆம் ஆண்டு நிக்கல் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளோட்டியால் மோதப்பட்ட சைக்கிளோட்டி ஒருவர் 500,000 வெள்ளி கோரி சிவில் வழக்கு தொடுத்திருந்தார்.

தனக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவு, வருங்காலத்தில் ஏற்படக்கூடிய வருவாய் இழப்பு ஆகியவற்றுக்கு ஈடுகட்டவேண்டும் என்று கூறி அந்த சைக்கிளோட்டி வழக்கு தொடுத்தார். அவர் ஓர் இயன் மருத்துவர்.

ஆனால், கினோ எர்னஸ்ட் இங் என்ற அவருக்கு துணைப் பதிவாளர் சிம் மெய் லிங் சுமார் 55,000 வெள்ளியையே வழங்கினார். இங் வருங்காலத்தில் தனக்கு வருவாய் ஈட்டுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறியது வெறும் யூகம் என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து இத்தொகை அவருக்கு வழங்கப்பட்டது.

சம்பவம் குறித்த விவரங்கள்

நிக்கல் நெடுஞ்சாலையில் ஓட்டிக்கொண்டிருந்தபோது ஆங் எங் பெங் என்ற மோட்டார் சைக்கிளோட்டி அவர்மீது மோதியதாக 25ஆம் தேதி வெளியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ள தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த விபத்தைத் தொடர்ந்து இங்கின் முதுகுத் தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரின் வலது முட்டி, வலது கை ஆகியவற்றில் சிராய்ப்புக் காயங்களும் ஏற்பட்டன.

2021 செப்டம்பர் நான்காம் தேதியிலிருந்து நவம்பர் 30ஆம் தேதி வரை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயத்தால் தன்னிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளைச் சரியாகக் கவனித்துக்கொள்வதில் தனக்கு உடல்ரீதியான பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என இங் கூறியிருந்தார்.

அதேவேளை, இங்குக்கு ஏற்பட்ட எலும்பு முறிவு நன்கு குணைமடைந்ததாகவும் அவர் வேலையில் தொடர்ந்து பணியாற்றுவதில் பெரிய சிக்கல் ஏதும் வராது என்றும் ஆங்கின் மருத்துவ வல்லுநர் குறிப்பிட்டிருந்தார்.

வேலைக்குத் திரும்பிய இங்

2021 டிசம்பர் மாதம் இங், தான் 50 விழுக்காட்டுப் பங்குதாரராகவும் இயக்குநராகவும் இருக்கும் இயன் மருத்துவ மருந்தகத்தில் வேலைக்குத் திரும்பினார்.

சம்பவத்துக்குப் பிறகு மருந்தகத்துக்கு இழப்பு ஏற்பட்டது. அந்த இழப்பில் 50 விழுக்காட்டுத் தொகையால் தனது சொந்த வருவாயும் பாதிக்கப்பட்டதாக இங் வாதிட்டார்.

அது அடிப்படையற்றது என்று துணைப் பதிவாளர் சொன்னார். வருவாய் இழப்புக்கு மற்ற காரணங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்இழப்பீடுவிபத்துபணம்மருத்துவம்