பாலஸ்டியர் பாயிண்ட் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில், காருக்கு அடியில் சிக்கிக்கொண்ட 51 வயது மிதிவண்டி ஓட்டி மீட்கப்பட்டு சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாம்சன் சாலையை நோக்கிச் செல்லும் பாலஸ்டியர் சாலையில் திங்கட்கிழமை (மே 25) காலை சுமார் 6 மணியளவில் இந்த விபத்து நேர்ந்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர், காவல்துறையினர் ஆகியோர் காருக்கு அடியில் சிக்கிக்கொண்ட மிதிவண்டி ஓட்டியை நீரழுத்த மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி மீட்டனர். பின்னர் அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக 54 வயது கார் ஓட்டுநரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிதிவண்டி ஓட்டி சாலையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியே திரும்பிய கார் அவர் மீது மோதியதை கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் காட்டுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.
மிதிவண்டி ஓட்டி காருக்கு அடியில் சிக்கியதும் கார் நிறுத்தப்படுவதும் காணொளியில் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூரில் காயங்களை ஏற்படுத்தும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் போக்குவரத்துக் காவல்துறையின் அண்மைய அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 2024ஆம் ஆண்டில் 7,053ஆக இருந்த இத்தகைய விபத்துகளின் எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டில் 7,560 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில், சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையும் 9,342லிருந்து 9,955ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

