$170 மில்லியன் ஒப்பந்தப்புள்ளிகளைக் கைப்பற்றிய சியேட்ரியம்

2 mins read
b8f6bd37-5b44-4768-bd7b-40e34c9688df
நெருக்கடியான நேரத்தைச் சந்தித்து வரும் சியேட்ரியம் நிறுவனத்திற்குப் புதிதாகக் கிடைத்த ஒப்பந்தப்புள்ளி புத்துணர்ச்சி கொடுத்துள்ளது. - படம்: சியேட்ரியம்

கப்பல் கட்டுமானம் மற்றும் புதுப்பிப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் சியேட்ரியம் (Seatrium) நிறுவனம் 170 மில்லியன் வெள்ளி மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகளைக் கைப்பற்றியுள்ளது.

ஒப்பந்தப்புள்ளிகள் தொடர்பான தகவல்களைச் சியேட்ரியம் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) வெளியிட்டது.

முன்னணி சொகுசு மற்றும் உல்லாசக் கப்பல்களைப் பழுது பார்த்தல், மேம்பாட்டுப் பணிகளுக்கும் கப்பல்கள் கட்டுவதற்கும் ஒப்பந்தப்புள்ளிகள் கிடைத்ததாக நிறுவனம் குறிப்பிட்டது.

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்குள் அனைத்து வேலைகளும் முடிக்கப்படும் என்று அது கூறியது.

அண்மையில் சியேட்ரியம் நிறுவனத்தின் 615.6 மில்லியன் ஒப்பந்தப்புள்ளியை மெர்ஸ்க் ஆஃப்ஷோர் விண்ட் (Maersk Offshore Wind) நிறுவனம் ரத்து செய்தது. இது சியேட்ரியம் நிறுவனத்திற்குப் பெரிய அடியாக அமைந்தது.

பெரிய கப்பல் கட்ட 2022ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தப்புள்ளியை மெஸ்க் நிறுவனம் மேற்கொண்டது. கப்பல் கட்டி முடிக்கும் நேரத்தில் மெர்ஸ்க் ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்தது. தற்போது சியேட்ரியம் மெர்ஸ்க் நிறுவனத்திற்கு எதிராகப் போராடி வருகிறது.

நெருக்கடியான நேரத்தைச் சந்தித்து வரும் சியேட்ரியம் நிறுவனத்திற்குப் புதிதாகக் கிடைத்த ஒப்பந்தப்புள்ளி புத்துணர்ச்சி கொடுத்துள்ளது.

மத்தியக் கிழக்கிலிருந்து ஒரு பெரிய சொகுசுக் கப்பலைக் கட்ட ஒப்பந்தப்புள்ளி கிடைத்துள்ளது. அதுபோக கார்னிவல் கார்ப்பரரேசன், ராயல் கரீபியன் குரூப், போனன்ட் எஸ்பிலோரேசன் குரூப் ஆகியவற்றின் சில முன்னணிக் கப்பல்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்புப் பணிகளும் சியேட்ரியத்திற்கு கிடைத்துள்ளன.

அதேபோல் மூன்று கப்பல்களை மேம்படுத்தவும் ஒரு கப்பலைப் பிரித்து எடுக்கவும் ஒப்பந்தம் கிடைத்துள்ளது.

“போட்டிமிக்க சூழலில் தொடர்ந்து புதிய வேலைகள் கிடைப்பது மகிழ்ச்சி தருகிறது, நிறுவனத்தின்மீதான நம்பிக்கையை இது எடுத்துக்காட்டுகிறது,” என்று சியேட்ரியம் பேச்சாளர் கூறினார்.

புதிய ஒப்பந்தப்புள்ளிகளால் சியேட்ரியம் நிறுவனத்தின் பங்குகளும் சற்று அதிகரித்துள்ளன. தற்போது அதன் ஒரு பங்கின் விலை 2.21 வெள்ளியாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்