தொடர்ந்து உழைப்பதே தஞ்சோங் பகார் குழுத்தொகுதிக்கான மக்கள் செயல் கட்சி (மசெக) அணியின் குறிக்கோள்.
“நமது பிரசாரம் (இந்த) ஒன்பது நாள்களில் நடப்பது மட்டுமல்ல,” என்றார் கல்வி அமைச்சர் சான் சுன் சிங். அவர், மே மாதம் மூன்றாம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒன்பது நாள்கள் பற்றிப் பேசினார்.
தஞ்சோங் பகார் குழுத்தொகுதிக்கான மசெக அணிக்குத் தலைமை தாங்கும் அமைச்சரான திரு சான், வியாழக்கிழமை (ஏப்ரல் 24) தெலுக் பிளாங்கா டிரைவில் தொகுதி உலா மேற்கொண்டபோது செய்தியாளர்களிடம் பேசினார்.
“குடியிருப்பாளர்களுக்காக தினமும் தொடர்ந்து உழைப்பதே ஆக முக்கியமானது,” என்று அவர் சொன்னார்.
“நாம் செய்யப்போவது, மற்ற எல்லா நாள்களிலும் செய்வதிலிருந்து அதிகம் மாறுபடாது,” என்றார் திரு சான். தமது தொகுதியில் தொடர்ந்து செயல்பட்டு குடியிருப்பாளர்களுடன் தொடர்பில் இருக்க தமது அணியின் முயற்சிகளை அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பொறுப்பு வகித்த வர்த்தக, தொழில் மற்றும் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சுகளுக்கான துணை அமைச்சர் ஆல்வின் டான், ஜோன் பெரேரா ஆகியோர் அத்தொகுதிக்கான மசெக அணியில் இடம்பெறுகின்றனர். அவர்கள் ஏற்கெனவே அத்தொகுதிக்கான மசெக அணியில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.
அவர்களோடு தெலுக் பிளாங்கா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திருவாட்டி ரேச்சல் ஓங்கும் அணியில் இடம்பெறுகிறார். தெலுக் பிளாங்கா, இப்போது தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
அது முன்னதாக வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
முன்னாள் போக்குவரத்து அமைச்சின் இயக்குநரான ஃபூ செசியாங்கும் தஞ்சோங் பகார் மசெக அணியில் இருக்கிறார். அவர் முதன்முறையாகத் தேர்தலில் களமிறங்குகிறார்.
சீர்திருத்த மக்கள் கூட்டணியுடனான போட்டி குறித்துக் கவலைப்படுகிறாரா என்று கேட்கப்பட்டதற்கு திரு சான், “யார் வருகிறார், போகிறார் என்பதைப் பொறுத்து எங்கள் திட்டம் அமையவில்லை,” என்றார்.