தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரயில் சேவை தடை: கிழக்கு-மேற்கு தடத்தில் இறுதிக் கட்ட சோதனை

2 mins read
deb38426-c4da-4521-a946-2e62fc111c65
உலு பாண்டான் பணிமனையில் மணல் மூட்டை ஏற்றப்பட்ட ரயில் தண்டவாளத்தில் ஓட்டி சோதிக்கப்பட்டது. - கோப்புப் படம்: எல்டிஏ ஃபேஸ்புக்

கிளமெண்டிக்கும் உலு பாண்டான் பணிமனைக்கும் இடையே சேதமடைந்த அனைத்து தண்டவாளப் பகுதிகளும் மாற்றப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், கிழக்கு-மேற்கு எம்ஆர்டி தடத்தில் இடம்பெற்றுள்ள நான்கு நிலையங்களில் சேவையைத் தொடங்குவதற்கான பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

செப்டம்பர் 30ஆம் தேதி காலை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் ரயில்களுக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் 3வது ரயில் சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.

ஏராளமான சோதனைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் தண்டவாளப் பகுதிகள் உறுதியாகவும் நன்கு பற்ற வைக்கப்பட்டு உள்ளதையும் உறுதிப்படுத்தும் சோதனைகளும் அடங்கும் என்று ஆணையம் குறிப்பிட்டது.

ரயில் முழுக்க பயணிகள் இருப்பது போன்று மணல் மூட்டைகள் ஏற்றப்பட்ட ரயில் சோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

மின்சார இணைப்பு சோதனைகளும் முடிந்துள்ளன. இந்தச் சோதனை மூலம் 3வது ரயிலுக்கும் மின்சக்தியில் ஓடும் ரயிலுக்கும் இடையே மின்காப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்ம்பர் 25ஆம் தேதி ஜூரோங் ஈஸ்ட், புவன விஸ்தா இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் இதுவரை 2.1 மில்லியன் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ரயில்களை இயக்கும் எஸ்எம்ஆர்டியும் நிலப் போக்குவரத்து ஆணையமும் அக்டோபர் 1ஆம் தேதிக்குள் ரயில் சேவையை வழக்க நிலைக்குக் கொண்டுவர இலக்கு வைத்திருந்தன.

ஆனால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முழுமையாக அனைத்து சோதனைகளும் முடிந்த பிறகு ரயில் சேவையைத் தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படவிருக்கிறது

முன்னதாக அக்டோபர் 30ஆம் ரயில் சேவையை மீண்டும் தொடங்க எஸ்எம்ஆர்டி முடிவு செய்திருந்தது. ஆனால் தண்டவாளப் பகுதிகளின் தாக்குப்பிடிக்கும் தன்மை செப்டம்பர் 28ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அப்போது மேலும் 12 விரிசல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மாற்றப்படாத ரயில் தண்டவாளப் பகுதிகளில் இந்த விரிசல் முன்பு கண்கூடாகத் தெரியவில்லை.

இதன் காரணமாக, கிளமெண்டியிலிருந்து உலு பாண்டான் நோக்கிச் செல்லும் மேற்குப் பாதையில் மேலும் பத்து தண்டவாளப் பகுதிகளை பொறியாளர்கள் மாற்றுகின்றனர்.

கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி சேவையிலிருந்து மீட்கப்பட்ட ரயில் உலு பாண்டான் பணிமனைக்குக் கொண்டு சென்றபோது பழுதடைந்தது.

அந்த ரயில் முதல் தலைமுறையைச் சேர்ந்த கவசாக்கி ரயிலாகும். முப்பது ஆண்டுகளுக்கு மேல் இந்த ரயில் சேவையில் இருந்து வருகிறது. செப்டம்பர் 25ஆம் தேதி காலை 9.00 மணியளவில் கிளமெண்டி எம்ஆர்டி நிலையத்துக்கு அருகே கிழக்கு நோக்கிச் சென்றபோது ரயிலில் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த ரயில் குவீன்ஸ்டவுன் அருகே உலு பாண்டான் பணிமனையை நோக்கி திருப்பிவிடப்பட்டது.

அப்போது டோவர் நிலையத்துக்கு அருகே ‘ஆக்ஸில் பாக்ஸ்’ (Axle Box) எனப்படும் ரயிலுக்கு அடியில் இருக்கும் சக்கரத்தின் அச்சாணிப் பெட்டி தண்டவாளத்தில் கழன்று விழுந்தது. இதனால் தண்டவாளமும் தண்டவாளத்தையொட்டியிருந்த சாதனங்களும் சேதமடைந்தன. இதன் காரணமாக ரயில் சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.

குறிப்புச் சொற்கள்