பார்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அலெக்சாண்டிரா மருத்துவமனையில் 2027 பிப்ரவரி முதல் சிகிச்சையின் ஒரு பகுதியாக நடனம் பரிந்துரைக்கப்படும்.
ஈராண்டுகளுக்குமுன் அந்நோயால் பாதிக்கப்பட்ட 80 வயது லிம் ஹுவாய் டின், தமக்கு நடனம் தெரியாது என்றபோதிலும், பாடலின் தாளத்திற்கேற்ப வழிநடத்துபவரின் அசைவுகளை எளிதாகப் பின்பற்றினார்.
பார்கின்சன்ஸ் நோய்க்கு முழுமையான தீர்வு இல்லாததால், நடுக்கம், நடைக் கோளாறு போன்ற அறிகுறிகளைத் தணிக்க மருந்துகளும் மறுவாழ்வு சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.
இனி நடன இயக்கச் சிகிச்சையும் அதில் இணையும். இசைக்கேற்ப ஆடுவது நோயாளிகளின் நடை, சமநிலை, சிந்தனைத் திறன், மனநிலை ஆகியவற்றை மேம்படுத்தும் என ஆய்வுகள் காட்டுகின்றன.
பயிற்சிபெற்ற வழிநடத்துபவருடன் முதியோர்நல மருத்துவர்கள், தாதியர், மருந்தாளுநர்கள், சிகிச்சை வல்லுநர்கள் இணைந்து அச்சிகிச்சையை வழங்குவர்.
இதற்கு நோயாளிகளுக்கு நடன அனுபவம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை எனவும் இசைக்கேற்ப அசைவதுகூட மூளையின் மாற்றுப் பாதைகளைத் தூண்டிச் செயல்பாட்டை எளிதாக்கும் எனவும் அலெக்சாண்டிரா மருத்துவமனையின் ஆய்வாளர் காயோ சகாமோட்டோ கூறினார்.
மருந்துகளால் தீர்க்க முடியாத செயல்பாட்டுத் தடை, தனிமை உணர்வு ஆகியவற்றுக்கு நடனம் மருந்தாகச் செயல்படுவதாக முதியோர்நல ஆலோசகர் பிரீத்தா வேணுகோபாலன் மேனன் கூறினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பார்கின்சன்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 84ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் 256ஆக மும்மடங்காக உயர்ந்துள்ளது.
சிங்கப்பூரில் 50 வயதுக்கு மேற்பட்ட 1,000 பேரில் மூவர் அந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். முதுமைக்கால மறதிநோய்க்குப் பிற நிறுவனங்கள் நடனத்தைப் பயன்படுத்தியுள்ள நிலையில், தங்களது அணுகுமுறை மிகவும் ஒருங்கிணைந்தது எனத் திருவாட்டி மேனன் குறிப்பிட்டார்.
அடுத்த ஐந்தாண்டுகளில், செங்ஹாவ் அறநிறுவனத்தின் $250,000 நிதியுதவியுடன் ‘பார்கின்சன்ஸ் கஃபே’ எனும் புதிய முறையிலும் சிகிச்சை வழங்கப்படும்.
உணவகச் சூழலில் மருத்துவ ஆலோசனையையும் சக நோயாளிகள், பராமரிப்பாளர்கள் ஆகியோரின் ஆதரவையும் இது இணைக்கும். அத்திட்டத்தை எதிர்காலத்தில் பிற பொதுச் சுகாதார நிலையங்களுக்கும் விரிவுபடுத்த இலக்கு கொள்ளப்பட்டுள்ளது.
