சமூக ஊடகங்களில் பரவலாகி வரும் இணையச் சவால்களில் பிள்ளைகள் ஈடுபடக்கூடும் என்பதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அச்சவால்கள் பிள்ளைகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும் என்றும் அது சொன்னது.
மார்ச் 3 ஆம் தேதி பெற்றோர்களுக்கான ‘கேட்வே’ செயலியில் வெளியான ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ள சவால்களில் ஒன்று, ‘பிளாக்அவுட்’.
அச்சவாலில் வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு உணர்விழந்த நிலைக்கு வரும் வரை தங்களைத் தாங்களே மூச்சுத் திணறச் செய்துகொள்ள வேண்டும்.
சிறுவர் ஒருவர் மற்றொரு சிறுவரை மூச்சுத் திணறடித்ததைப் போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகச் செய்தி தயாரிப்பாளரான ரன்னர் காவ் என்பவருக்குப் பகிரப்பட்டதாகக் கூறப்பட்டது. அக்காணொளியிலிருந்து ஒரு காட்சியை மட்டும் படமாக எடுத்து மார்ச் 1ஆம் தேதி வெளியான தனது இன்ஸ்டகிராம் பதிவில் அச்செயலில் ஈடுபட்ட சிறார்களை திரு காவ் கண்டித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இணையத்திலிருந்து தற்போது அகற்றப்பட்ட அந்த இன்ஸ்டகிராம் பதிவில், செயிண்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி சீருடை அணிந்திருந்த சிறார்கள் இருவரில் ஒருவர் மற்றொருவரை மூச்சுத் திணறடித்து மயக்கமடையும் நிலை வரை கொண்டுசெல்லும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.
உலகளவில் சிறார்கள் சிலர் அந்த ‘பிளாக்அவுட்’ சவாலைச் செய்து உயிரிழந்ததாக ‘பிபிசி’ செய்தி நிறுவனம் கூறியது.
ஆபத்தான இணையச் சவால்களிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பதிலும் அவர்கள் பொறுப்பான முடிவுகளை எடுக்க வழிகாட்டுவதிலும் பெற்றோர்கள் தீவிர பங்கு வகிக்க வேண்டும் எனக் கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இணையப் போக்குகளைத் தொடர்ந்து அறிந்துகொள்வது, இதுபோன்ற சவால்களில் ஈடுபடுவதால் ஏற்படும் சாத்தியமான தீங்குகளைப் பற்றி பிள்ளைகளுடன் விவாதிப்பது, இந்த சவால்களை தங்கள் நண்பர்கள் யாரேனும் முயற்சி செய்யவுள்ளதாக உங்கள் பிள்ளை அறிந்திருந்தால், அதை உடனே அந்த நண்பரின் பெற்றொரிடம் தெரிவிக்குமாறு பிள்ளையை ஊக்குவிக்க வேண்டும் ஆகியவை அமைச்சு வழங்கிய ஆலோசனைகளில் அடங்கும்.