சிம்பா தொலைத்தொடர்பு நிறுவன வாடிக்கையாளர்கள் 23,549 பேரின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்துவிட்டதாக அந்நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்தது.
சிம்பா சேவைகளைப் பெறுவதற்காக வாடிக்கையாளர்களின் பெயர், அடையாள அட்டை எண், பிறந்த தேதி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவை கசிந்தன.
அதே வேளையில், கடனட்டை அல்லது வங்கிக் கணக்கு விவரம் எதுவும் கசியவில்லை என்றும் அவை தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல் இல்லை என்றும் சிம்பா தெரிவித்தது.
தரவுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் கைப்பேசிச் சேவை வாடிக்கையாளர்களா அல்லது அகண்ட அலைவரிசை வாடிக்கையாளர்களா அல்லது இருதரப்பினருமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த வியாழக்கிழமை கண்டறியப்பட்ட தரவுக்கசிவு உடனடியாகச் சரிசெய்யப்பட்டுவிட்டதாக சிம்பா குறிப்பிட்டது.
அத்துடன், நடப்பிலுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்துவருவதாகவும் அதன் தொடர்பில் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் விளக்கியது.
மேலும், தரவுக்கசிவால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அதுகுறித்து மின்னஞ்சல்வழி தகவல் தெரிவித்து வருவதாகவும் அந்நடவடிக்கை அடுத்த வாரத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்ப்பதாகவும் சிம்பா தெரிவித்தது.
இந்நிலையில், சிம்பா வாடிக்கையாளர் தரவுக்கசிவு குறித்து அறிந்துள்ளதாகவும் அதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தனிநபர் தரவுப் பாதுகாப்பு ஆணையத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜூலை 31 நிலவரப்படி, சிம்பா நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 1.5 மில்லியன் கைப்பேசிச் சந்தாதாரர்களும் 62,000 அகண்ட அலைவரிசைச் சந்தாதாரர்களும் உள்ளனர்.
