சிங்கப்பூரில் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் அமெரிக்க தரவு, செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ‘டேட்டாபிரிக்ஸ்’, இங்கு $445 மில்லியனுக்கும் அதிகமான முதலீடு செய்யவிருக்கிறது.
அத்துடன், அடுத்த மூவாண்டுகளில் அதன் ஊழியரணியை இரட்டிப்பாக்கி 500க்கும் அதிகமான ஊழியர்களைப் பெற ‘டேட்டாபிரிக்ஸ்’ இலக்குக் கொண்டுள்ளது.
நிறுவனத்தின் ஆசிய-பசிபிக், ஜப்பான் ஆகியவற்றுக்கான தலைமையகம் சிங்கப்பூரில் உள்ளது. அதன் உள்ளூர்த் தொழில்நுட்பக் குழுவும் இரட்டிப்பாகி 200க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டிருக்கும். தற்போது அதில் 100க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.
நிறுவனம் பணியமர்த்தும் பணிகளில் ‘ஃபார்வர்ட் டீப்ளாய்ட்’ பொறியாளர்கள் அடங்குவர்.
அவர்கள் வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உருவாக்கவும் அவற்றை மாற்றியமைக்கவும், வாடிக்கையாளர்களின் தற்போதைய அமைப்புகளுடன் அவற்றை ஒருங்கிணைக்கவும் நேரடியாக அவர்களுடன் இணைந்து பணியாற்றுவர்.
“நிதிச் சேவைகள், சுகாதாரம், உற்பத்தி, தொடர்புத் துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் உள்ள நிறுவனங்கள், தங்களின் மிக முக்கியமான, சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளை ஆரம்பக் கட்ட சோதனையிலிருந்து முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல நாங்கள் உதவப் போகிறோம்,” என்று ‘டேட்டாபிரிக்ஸ்’ நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் சைமன் டேவிஸ் கூறினார்.
சான்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ‘டேட்டாபிரிக்ஸ்’ நிறுவனத்தின் ‘டேட்டா + ஏஐ வேர்ல்ட் டூர் சிங்கப்பூர்’ நிகழ்வின் போது, சிங்கப்பூருக்கான இந்த முதலீடுகள் குறித்து அவர் அறிவித்தார்.
தொழில்நுட்பக் குழுவை விரிவுபடுத்துவதன் மூலம், உள்ளூர் நிறுவனங்களுக்கு நேரடிச் செயல்முறைத் திறன்களையும் தனித்துவமான பொறியியல் ஆதரவையும் கொண்டு வர முடியும்.
அத்துடன், எதிர்காலச் செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களை அளவிடுவதற்கான இயக்க மாதிரிகளை நிறுவ முடியும் என்று ஆசியா-பசிபிக், ஜப்பான் ஆகியவற்றுக்கான பொது மேலாளருமான டேவிஸ் தெரிவித்தார்.
வளர்ந்து வரும் இந்தப் பணியாளர்கள் குழு, நவம்பர் மாதத்தில் ‘ஐஓஐ சென்ட்ரல் பொலிவார்ட் டவர்ஸில்’ உள்ள 32,000 சதுர அடி பரப்பளவு கொண்ட புதிய அலுவலகத்திற்கு மாறவுள்ளது.
இது டேட்டாபிரிக்ஸ் நிறுவனத்தின் தற்போதைய அலுவலகத்தை விட நான்கு மடங்கு பெரிது.
