மகள், பேத்திகள் இருவர், சகோதரர் மகள்கள் நால்வர் உட்பட 11 பெண்களுக்கு 30 ஆண்டு காலத்தில் பாலியல் வன்கொடுமை இழைத்த 71 வயது ஆடவருக்கு வியாழக்கிழமை (செப்டம்பர் 17) 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்களில் மற்ற நால்வர் 1997லிருந்து 2021ஆம் ஆண்டு வரை குற்றவாளியும் அவரின் மனைவியும் வேலை செய்த இணைப்பாட நிலையத்தில் மாணவர்களாக இருந்தவர்கள். அந்த 11 பெண்களுக்கு 1990லிருந்து 2023ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டது. அவர்களில் சிலருக்கு ஐந்து அல்லது ஆறு வயது மட்டுமே ஆகியிருந்தது.
குற்றங்கள் நிகழ்ந்த காலகட்டத்தில் குற்றவாளி இருமுறை சிறைக்குச் சென்றார். பாலியல் குற்றங்களுக்காக அவர் 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் 2020 மார்ச் மாதமும் சிறைக்கு அனுப்பப்பட்டார். சம்பந்தப்பட்ட 11 பெண்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல், மானபங்கக் குற்றங்களுக்காக அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த 11 பெண்கள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றங்கள் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் வெளிச்சத்துக்கு வந்தன. தாத்தா, தங்களுக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்ததாகப் பேத்திகள் தாயிடம் தெரியப்படுத்திய பிறகு குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
குற்றவாளியான ஆடவர் தற்போது சக்கர நாற்காலியில் நடமாடுகிறார். அவருக்கு அரியவகை ரத்தப் புற்றுநோய் இருக்கிறது.
