சிங்கப்பூரில், பாலியல் வன்கொடுமை செய்த தந்தையைப் பற்றி 15 வயதுப் பெண் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளிக்கச் சென்றதை அடுத்து அந்தப் பெண்ணின் தந்தை தாமாக முன்வந்து சரணடைந்துள்ளார்.
திங்கட்கிழமை (செப்டம்பர் 7), அந்த 51 வயது ஆடவர், பாலியல் வன்கொடுமை, மானபங்கம், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
நவம்பர் 2ஆம் தேதி அளிக்கப்படவிருக்கும் தீர்ப்பின்போது நம்பிக்கை மோசடி தொடர்பான வேறு இரண்டு குற்றச்சாட்டுகளும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலைப் புகைப்படங்கள் எடுத்த குற்றச்சாட்டும் கருத்தில் கொள்ளப்படும்.
2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன்வரை முதலாளியிடமிருந்து $23,000 தொகையைக் கையாடியது தொடர்பில் நம்பிக்கை மோசடிக் குற்றத்தை அந்த ஆடவர் எதிர்கொள்கிறார். ஆடவர் அப்போது வேலை செய்துகொண்டிருந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தார்.
2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி, பாலியல் வன்கொடுமை தொடர்பில் ஆடவர் கைதுசெய்யப்பட்டபோது அவரது நம்பிக்கை மோசடிக் குற்றங்களும் அம்பலமாகின.
மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்காக 2009ஆம் ஆண்டில் ஐந்தாண்டுகள் சீர்த்திருத்தப் பயிற்சிகளை மேற்கொள்ளும்படி ஆடவருக்கு உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, திங்கட்கிழமை (செப்டம்பர் 7), தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகள், வளரும்போதே துன்புறுத்தப்பட்டதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பல்வேறு தருணங்களில் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுப்பது, அடிப்பது போன்ற வகையில் ஆடவர் துன்புறுத்தியது தெரியவந்தது.
அத்தகைய செயல்கள் சாதாரணமானவைதான் என்று பாதிக்கப்பட்ட பெண் நம்பிக்கொண்டிருந்ததையும் வழக்கறிஞர் எடுத்துரைத்தார்.
2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி, வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது தொடர்பில் சினமடைந்த ஆடவர், உணவு மேசைமீதிருந்த பொருள்களைத் தரையில் தள்ளிவிட்டுப் பெண்ணை அவரது அறைக்குச் செல்லும்படி கூறினார்.
அடுத்த நாள் காலை, பெண்ணை எழுப்புவதற்கு அவரது அறைக்குச் சென்ற ஆடவர், அந்தப் பெண்ணை மானபங்கம் செய்ததுடன் அவரைப் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கினார்.
அதிர்ச்சியடைந்த பெண், ஆடவர் குளிக்கச் சென்றபோது வீட்டிலிருந்து வெளியேறி அக்கம்பக்கக் காவல் நிலையத்திற்குச் சென்று நடந்தவற்றை விவரித்தார்.
அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர், ஆடவருக்கு 13 ஆண்டுகள், 8 மாதங்களிலிருந்து 14 ஆண்டுகள் 9 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படும்படி கேட்டுக்கொண்டார்.
ஆடவர், 50 வயதைத் தாண்டியிருப்பதால் பிரம்படிகள் விதிக்கப்பட முடியாது.


