சிடிஎல் தலைமை நிர்வாக அதிகாரி ஷெர்மன் சார்பில் களமிறங்கும் தவிந்தர் சிங்

1 mins read
8dfca9f8-e7da-4d42-900b-ff810715a2c7
சிடிஎல் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி ஷெர்மன் குவெக், தம்முடைய வழக்கறிஞர்கள் குழுவில் மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங்கைச் சேர்த்துள்ளார். - படம்: சாவ்பாவ்

சிட்டி டெவலப்மென்ட்ஸ் லிமிடெட் (CDL) குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி ஷெர்மன் குவெக், 49, தம்முடைய வழக்கறிஞர்கள் குழுவில் மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங்கையும் சேர்த்துள்ளார்.

சிடிஎல் நிறுவனத் தலைவர் குவெக் லெங் பெங், அவரின் மகன் ஷெர்மன் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல், அண்மைய ஆண்டுகளில் பதிவான சிங்கப்பூரின் ஆகப் பெரிய இயக்குநர் வாரிய சச்சரவாக உருவெடுத்துள்ளது.

“பதவிக் கவிழ்ப்பு முயற்சி”யில் மகன் ஷெர்மன் இறங்கியுள்ளதாகக் கூறி, அவரைத் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து அகற்ற 84 வயது திரு குவெக் முயன்று வருகிறார்.

இயக்குநர் வாரிய உறுப்பினர்கள் அறுவருடன் ஷெர்மன் சேர்ந்து சிங்கப்பூரின் ஆகப்பெரிய சொத்துச் சந்தை நிறுவனத்தைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல்வதாக மூத்தவர் குறைகூறியுள்ளார்.

இருப்பினும், தந்தையைத் தாம் வெளியேற்ற முயலவில்லை என்று திரு ஷெர்மன் மறுத்து வருகிறார்.

திரு ஷெர்மனைத் தவிர அவரின் ஆறு இயக்குநர் வாரிய உறுப்பினர்களையும் திரு சிங் பிரதிநிதிப்பார் என்று கூறப்படுகிறது.

வழக்காடுவதில் சிங்கப்பூரின் முதன்மை வழக்கறிஞராகப் பரவலாக அறியப்படும் திரு சிங், பலமுறை நாட்டின் முந்தைய பிரதமர்களான லீ குவான் யூ, லீ சியன் லூங்கை வெவ்வேறு வழக்குகளில் பிரதிநிதித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்