கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாக மசாலாத் தயாரிப்புத் துறையில் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்று நிலைத்து நிற்கிறது தாவூத் மாவு மில் & மளிகை பிரைவேட் லிமிடெட்.
இன்று நாட்டின் முன்னணி மாவு, மசாலாத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இந்நிறுவனத்தின் தலைமை வளாகம் 3017 பிடோக் நார்த்தில் அமைந்துள்ளது.
அனைத்து வகையான தானியங்கள், மூலிகைகள், மசாலாப் பொருள்களை அரைத்துத் தரும் உயர்தரச் சேவையை வழங்கி வருகிறது தாவூத் நிறுவனம்.
இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை நிலையம் 94 ஜூ சியாட் சாலையில் அமைந்துள்ளது. சில்லறை வாடிக்கையாளர்கள் நேரடியாகச் சென்று மசாலாப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.
இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹாஜா மொய்னுதீன், தம் குடும்பத்தின் அடுத்த தலைமுறையோடு இணைந்து, பாரம்பரியம் மாறாத தரத்துடன் இவ்வணிகத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்.
70 ஆண்டு கடந்த வரலாறு
தமிழ்நாட்டின் கூத்தாநல்லூரைச் சேர்ந்த ஷேக் தாவூத் அவர்களால் 1950இல் தொடங்கப்பட்டது இந்நிறுவனம்.
1972இல் அவரது மறைவிற்குப் பிறகு, திரு அப்துல் காதர் பொறுப்பேற்று இத்தொழிலை விரிவுபடுத்தினார்.
1985ஆம் ஆண்டு தேசிய சேவையை முடித்த பிறகு, தம் 20வது வயதில் தம் தந்தையோடும் அண்ணன் காதர் பாட்சாவோடும் இணைந்து இத்தொழிலில் களமிறங்கினார் இன்றைய இயக்குநர் ஹாஜா மொய்னுதீன்.
தொடர்புடைய செய்திகள்
“மற்றவரிடம் வேலை செய்யாமல் சொந்தத் தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே என்னைக் குடும்பத் தொழிலுக்கு ஈர்த்தது,” என்றார் திரு மொய்னுதீன்.
1985இல் தந்தை அப்துல் காதரும் 2022இல் அண்ணன் காதர் பாட்சாவும் மறைந்த பிறகு, திரு மொய்னுதீன் இத்தொழிலை ஏற்று நடத்தி வருகிறார்.
காலமாற்றமும் தொடரும் வளர்ச்சியும்
தொடக்கத்தில் சிறிய கடைகளுக்கு விநியோகிக்கும் சில்லறை வியாபாரமாகத் தொடங்கினாலும், பல சவால்களைத் தாண்டி இன்று வலுவான நிறுவனமாகத் தாவூத் மில்ஸ் உருவெடுத்துள்ளது.
2010ஆம் ஆண்டு முதல் தரமான மூலப்பொருள்களை உலகின் பல நாடுகளிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யத் தொடங்கியது தாவூத் நிறுவனம்.
இந்தியாவிலிருந்து மல்லி, மிளகாய், வியட்னாமிலிருந்து பட்டை, ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமை, கடலைப் பருப்பு என ஒவ்வொரு நாட்டின் சிறப்பையும் உணர்ந்து தரமான பொருள்களைச் சிங்கப்பூர் மக்களுக்கு இந்நிறுவனம் வழங்கி வருகின்றது.
தனித்துவமான சுவையின் ரகசியம்
“தாவூத் நிறுவனத்தின் தனித்துவமே மசாலாக்களின் செய்முறைதான்,” என்கிறார் திரு மொய்னுதீன்.
மறைந்த திரு காதர் பாட்சாவால் உருவாக்கப்பட்ட தனித்துவமான மசாலாக் கலவைகள் இன்றும் மாறாத சுவையுடன் வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன.
இறைச்சி மசாலா, மீன் மசாலா, சாம்பார் மசாலா, ரசப்பொடி போன்ற கலவை மசாலாக்கள் மட்டுமின்றி, மல்லித்தூள், மஞ்சள்தூள் போன்ற தனித்துவமான பொடிகளும் தரமாகத் தயாரிக்கப்படுகின்றன.
பிடோக் நார்த் வளாகத்தில் அமைந்துள்ள தாவூத் மில் தொழிற்சாலையில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மூலப்பொருள்களைத் தாங்களே நேரடியாகத் தேர்ந்தெடுத்து, சுகாதாரமான முறையிலும் மலிவு விலையிலும் அரைத்துச் செல்லலாம்.
ரமலான் காலத்தில் சமூகப் பணி
ஈகைத் திருநாள் காலகட்டத்தில் ஜாமிஆ சூலியா பள்ளிவாசல், பென்கூலன் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களுக்கு ‘நோன்புக் கஞ்சி’ தயாரிக்க தேவைப்படும் மசாலாக்களை தாவூத் மில்ஸ் விநியோகித்து வருகிறது.
குறிப்பாக, பண்டிகைக் காலத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு தயாரிப்பாக விளங்குகிறது பிரியாணி மசாலா.
அடுத்த தலைமுறையின் இலக்கு
திரு ஹாஜா மொய்னுதீன் தம் குடும்பத்தின் அடுத்த தலைமுறையோடு இணைந்து இவ்வணிகத்தை ஒரு குடும்பத் தொழிலாக முன்னெடுத்துச் செல்கிறார்.
திரு முகமது கசாலி இறக்குமதிப் பிரிவையும் திரு ஆசிப் ரஹ்மான் விற்பனை பிரிவையும் கவனித்து வருகின்றனர்.
தற்போது நிறுவனங்களுக்கு மட்டும் மசாலாப் பொருள்களை விநியோகித்து வரும் இந்நிறுவனம், விரைவில் சில்லறை விற்பனையின் மூலம் நேரடியாக வாடிக்கையாளர்களைச் சென்றடையத் திட்டமிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, லண்டன், மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து உலகளாவியச் சந்தையில் தடம் பதிப்பதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
“எங்களது தாவூத் மாவு மில் போன்ற உள்ளூர் நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கி, சிங்கப்பூரின் பாரம்பரிய சுவையை உலகிற்குக் கொண்டுசெல்லும் எங்களது முயற்சியில் நீங்களும் இணையுங்கள்,” எனத் திரு ஹாஜா மொய்னுதீன் தமது வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

