இளையர்களின் மொழியாற்றலைச் சோதித்த ‘தாயம்’

2 mins read
6a88e152-9795-4a68-a03d-fbe5f992bcc9
போட்டியில் வெற்றி பெற்ற குழு. - படம்: அனுஷா செல்வமணி

தமிழ் இலக்கியம், கலைகள், பொது அறிவு, பாரம்பரியம் உள்ளிட்டவற்றை சுவாரசியமான வகையில் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் பணியை ‘தமிழா’ அமைப்பைச் சேர்ந்த இளைய மாணவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த அமைப்பு தமிழுக்குப் பங்காற்றுவது மட்டுமன்று, மொழி, மரபு சார்ந்த போட்டிகளை நடத்தி வருகிறது. அண்மையில், நான்கு பிரிவுகளில் ‘தாயம்’ விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர்.

தேசிய நூலகத்தின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக நடைபெற்ற போட்டி, உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) நடைபெற்றது.

மாணவர்களின் மொழித் திறனைச் சோதிக்கும் வகையில் முதல் சுற்றில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 36 இளையர்களை மூவர் கொண்ட 12 குழுக்களாகப் பிரித்தனர்.

இலக்கியம், கலைகள், பொது அறிவு, பாரம்பரியம் ஆகிய தலைப்புகளையொட்டி கேள்விகள் கேட்கப்பட்டன. கால அவகாசத்தைக் கருத்தில் வைத்துக்கொண்டு இளையர்கள் முட்டி மோதினர்.

முதல் சுற்றில் வென்ற நான்கு குழுக்கள் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றன. அதிலிருந்து இரு குழுக்கள் இறுதிச்சுற்றுக்குச் சென்றன.

இறுதிச் சுற்றில் வெற்றிபெற்ற குழுவினருக்கு $250 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

“தாயம் போட்டியில் பங்கேற்றமுன் அனுபவம் இருந்ததால் எங்களால் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்க முடிந்தது. இதுபோன்ற போட்டிகளில் இளையர்கள் பங்கேற்க நான் அதிகம் ஊக்குவிப்பேன். இதன்மூலம் தமிழ் மொழி புழக்கத்தை அவர்களிடையே அதிகரிக்க முடியும்,” என்று வெற்றியாளர் குழுவில் இடம்பெற்றிருந்த ராஜன் ஆக்னஸ் திவா, 19, சொன்னார்.

“தாயத்தில் இரண்டாவது முறையாக நாங்கள் கலந்துகொள்கிறோம். நாங்கள் பல தகவல்களை இந்நிகழ்ச்சி மூலம் கற்றுக்கொண்டோம். ஏற்கெனவே சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த யுத்தம் போட்டியிலும் நாங்கள் பங்குகொண்டோம். இதனால், இந்தப் போட்டியில் எங்களால் சிறப்பாகச் செய்ய முடிந்தது,” என்றார் இரண்டாவது பரிசு வென்ற குழுவைச் சேர்ந்த ஃபஹ்மிதா சனா, 21.

“போட்டியை ஏற்பாடு செய்தது மிக சவால்மிக்கதாக இருந்தது. தாயம் விளையாட்டில் அதிர்ஷ்டம் முக்கிய பங்காற்றுகிறது. இளையர்களை ஈர்க்கும் வகையில் புத்தாக்க அம்சங்களைப் போட்டியில் சேர்த்தோம். இன்றைய தமிழ் இளையர்கள் தமிழ்மீது ஆர்வம் வைத்துள்ளார்கள் என்பதற்கு இந்தப் போட்டி ஒரு நல்ல எடுத்துக்காட்டு,” என்றார் இந்த ஆண்டு தாயம் போட்டியின் இயக்குநர் மோகன் ஹரிவர்தினி, 19.

குறிப்புச் சொற்கள்