டிபிஎஸ் குழுமம் 2026 இரண்டாவது காலாண்டிற்கான ஈவுத்தொகையாகப் பங்கிற்கு 81 காசு அறிவித்துள்ளது. செல்வ நிர்வாக வருவாய் சாதனை அளவை எட்டியதால், வங்கியின் நிகர லாபம் 9 விழுக்காடு அதிகரித்தது. இந்த ஈவுத்தொகையில் 66 காசு சாதாரண ஈவுத்தொகையும் 15 காசு மூலதனத் திருப்பியளிப்பு ஈவுத்தொகையும் அடங்கும். தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய வங்கியான டிபிஎஸ், இதற்காக ஏறக்குறைய $2.3 பில்லியன் செலவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், முதல் காலாண்டின் 81 காசு உட்பட ஆண்டின் முற்பாதி ஈவுத்தொகை 162 காசாக உயர்ந்துள்ளது. செய்தி வெளியானதும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) காலை 10.30 மணி நிலவரப்படி, டிபிஎஸ் பங்கு விலை 1.89 விழுக்காடு உயர்ந்து $75.20ஐ எட்டியது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் டிபிஎஸ் $3.08 பில்லியன் நிகர லாபம் ஈட்டியது. இது, கடந்த ஆண்டின் $2.82 பில்லியனைவிட அதிகம். வட்டி விகிதங்கள் குறைந்ததால் வங்கியின் நிகர வட்டி வருவாய் 2 விழுக்காடு சரிந்து $3.58 பில்லியனானது. இருப்பினும் கடன், வைப்புத்தொகை வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் பாதிப்பு குறைக்கப்பட்டது. ஆண்டின் முற்பாதியில் வலுவான செயல்திறன் இருந்ததால், முழு ஆண்டிற்கான வருவாய் 2025ல் இருந்த நிலையைத் தாண்டும் என டிபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், 2028க்குள் 600 வாடிக்கையாளர் சேவை ஆலோசகர்களைப் பணியமர்த்தவும் வங்கி திட்டமிட்டுள்ளது.
இரண்டாம் காலாண்டு நிதி நிலவர முடிவுகளை வெளியிட்ட முதல் சிங்கப்பூர் வங்கி டிபிஎஸ். யுஓபி, ஓசிபிசி வங்கிகள் அவற்றின் முடிவுகளை வெள்ளிக்கிழமை அறிவிக்கவுள்ளன.


