வாழ்க்கைத்தொழில் ஆலோசனைச் சேவையைத் தொடங்கியுள்ள டிபிஎஸ் வங்கி

வாழ்க்கைத்தொழில் ஆலோசனைச் சேவையைத் தொடங்கியுள்ள டிபிஎஸ் வங்கி

2 mins read
4f11c9a2-bbc1-4a99-bea6-c797abe0308c
டிபிஎஸ் வங்கி, சிங்கப்பூர் வங்கி, நிதி அமைப்புடன் புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

செயற்கை நுண்ணறிவால் வேலையிடங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஊழியர்களைத் தயார்ப்படுத்த, டிபிஎஸ் வங்கி ஒரு புதிய வாழ்க்கைத்தொழில் ஆலோசனைச் சேவையைத் தொடங்கியுள்ளது.

“நிதித் துறை இந்த மாற்றங்களின் மையப்பகுதியில் உள்ளது. சிங்கப்பூர் ஒரு முன்னணி நிதி மையமாகத் தொடர்ந்து நீடிக்க நாம் இதற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்,” என்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) நடைபெற்ற ‘டிபிஎஸ் லைவ் ஃபுல்ஃபில்டு ஃபெஸ்டிவல் 2026’ நிகழ்ச்சியில் வர்த்தக, தொழில் (எரிசக்தி, தொழில்துறை) அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார்.

“வழக்கமான பணிகளைத் தானியக்கமயமாக்கச் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டாலும், தானியக்கமயமாக்கல் மட்டும் முழுமையான மதிப்பைத் தந்துவிடாது,” என்றும் அவர் கூறினார்.

“புத்தாக்கமான முறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது, மனித உறவுகளை நிர்வகிப்பது, சிக்கலான முடிவுகளை எடுப்பது போன்ற அதிக மதிப்புமிக்க பணிகளை ஊழியர்கள் மேற்கொள்ளும் வகையில், வேலைப் பொறுப்புகளை மறுபரிசீலனை செய்து, அவர்களுக்குத் திறன் மேம்பாடும் மறுபயிற்சியும் அளித்து, வேலையை மறுவடிவமைப்பதில்தான் பெரிய பலன் உள்ளது,” என்று டாக்டர் டான் கூறினார்.

டிபிஎஸ் வங்கி அதன் மனிதவளத் துறையைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வாழ்க்கைத்தொழில் ஆலோசகர்களுக்குப் பயிற்சி அளித்திருப்பதாக அறிவித்தது.

அவர்கள் தங்கள் முதன்மைப் பொறுப்புகளுடன் ஆலோசனை வழங்கும் பணிகளையும் மேற்கொள்வர்.

அந்தப் புதிய சேவை, வேலையிட மாற்றங்களுக்கு மத்தியில் டிபிஎஸ் வங்கியில் தற்போது நடைமுறையிலுள்ள சுயசேவை செயற்கை நுண்ணறிவு வாழ்க்கைத்தொழில் மேம்பாட்டுக் கருவிகளைத் தாண்டி, ஊழியர்களுக்கு ஆலோசனை பெறுவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

அந்தப் புதிய வாழ்க்கைத்தொழில் ஆலோசனைச் சேவை, முதற்கட்டமாக டிபிஎஸ் வங்கியின் ஆறு முக்கியச் சந்தைகளில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
டிபிஎஸ்ஏஐஊழியர்கள்