குடியிருப்புக் கடைகள் மின்னிலக்கத் திறன்: வளர்க்க உதவும் டிபிஎஸ் வங்கித் திட்டம்

குடியிருப்புக் கடைகள் மின்னிலக்கத் திறன்: வளர்க்க உதவும் டிபிஎஸ் வங்கித் திட்டம்

2 mins read
4f265ae6-b685-407c-8e8c-24728e9d4cc9
பொங்கோலில் உள்ள ஓவசிஸ் டெரஸ் பகுதியில் குடியிருப்புக் கடைக்காரர்கள் மின்னிலக்கமயமாவதற்கு உதவ டிபிஎஸ் வங்கியின் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள கடைக்காரர்கள் மின்னிலக்க முறைக்கு மாற உதவும் இணைய வகுப்புகளை வழங்குவதாக (ஏப்ரல் 6) டிபிஎஸ் வங்கி அறிவித்துள்ளது.

அந்த இணைய வகுப்புகள்வழி கடைக்காரர்களால் புதிய வாடிக்கையாளர்களை இணையத்தில் பிடித்து வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொள்ள முடியும்.

குடியிருப்புக் கடைக்காரர்களுக்கான வங்கி (Heartland Merchant Banking Package) திட்டத்தில் இணையும் வர்த்தகங்கள் இணைய வகுப்புகளில் சேரலாம். டிபிஎஸ் வங்கியுடன் இணைந்து செயல்படும் வர்த்தகங்கள் மானியங்கள், ரொக்க சலுகைகள் மூலம் $1,880 வரை மிச்சப்படுத்தலாம்.

பொங்கோலில் உள்ள ஓவேசிஸ் டெரசஸ் பகுதியில் டிபிஎஸ் வங்கியின் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துவைத்தார் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன்.

அவர், உள்ளூர் பொருளியல் உட்பட வாடிக்கையாளர்கள், மூத்தோர், கடைக்காரர்கள் ஆகியோருக்கு டிபிஎஸ் போன்ற நிறுவனங்கள் ஆதரவு தர முன்வருவது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.

“இதன்மூலம் நிச்சயமற்ற எதிர்காலத்துக்கு நாம் யாவரும் ஒன்றுபட்டுத் தயாராக முடியும்,” என்றார் அவர்.

மூத்த அமைச்சர் டியோவுடன் பாசிர் ரிஸ் - பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான மூத்த துணை அமைச்சர்கள் ஜனில் புதுச்சேரி, டெஸ்மண்ட் டான், துணையமைச்சர் சுன் ஸுவெலிங் ஆகியோரும் காணப்பட்டனர்.

உலகம் கொந்தளிப்பான நேரத்தைக் கடந்துசெல்வதாக சொன்ன திரு டியோ, “உலகின் இரண்டு முக்கிய வல்லரசுகளுக்கு இடையே போட்டடாபோட்டி நிலவுகிறது, வெவ்வேறு அம்சங்களில் இரு வல்லரசுகளும் ஆதிக்கம் செலுத்த முற்படுகின்றன,” என்றார்.

அமெரிக்காவும் சீனாவும் ஒன்றன்மீது மற்றொன்று வரி விதித்து வருவது உலக அளவில் பல இடையூறுகளை ஏற்படுத்தப்போவதாகத் திரு டியோ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்