பானக்கலன் மறுசுழற்சித் திட்டத்தில் டிபிஎஸ் வங்கியின் ‘பேலா’ முறை

பானக்கலன் மறுசுழற்சித் திட்டத்தில் டிபிஎஸ் வங்கியின் ‘பேலா’ முறை

அனைத்துப் பரிவர்த்தனைகளும் மின்னிலக்க முறையில் மட்டுமே நடைபெறும்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

02 Mar 2026 - 12:58 pm

1 mins read
டிபிஎஸ் வங்கியின் ‘பேலா’ செயலியில் உள்ள ‘கியூஆர்’ குறியீட்டு முறையைப் பயன்படுத்தி 10 காசை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
டிபிஎஸ் வங்கியின் ‘பேலா’ செயலியில் உள்ள ‘கியூஆர்’ குறியீட்டு முறையைப் பயன்படுத்தி 10 காசை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். - படம்: டிபிஎஸ் வங்கி

அருந்தியபின் பானக்கலன்களைத் திருப்பித் தந்து 10 காசைப் பெற்றுக்கொள்ளும் திட்டம் (BCRS) ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக டிபிஎஸ் வங்கியின் ‘பேலா’ செயலியில் உள்ள மின்கட்டணப் பணப்பையைப் (DBS PayLah wallets) பயன்படுத்தி பொதுமக்கள் அந்த 10 காசைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்பாக ஈஸிலிங்க் (EZlink) அட்டைகளைக் கொண்டு காசைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மறுசுழற்சிக்கான ‘டொம்ரா’ (Tomra) இயந்திரங்களில் அந்தக் கலன்களைப் போடும்போது10 காசைப் பெற்றுக்கொள்ளலாம். தீவெங்கும் 1,000 இயந்திரங்கள் இந்தச் சேவையை வழங்கும்.

‘பேலா’ முறையைப் பயன்படுத்த, தனிப்பட்ட கியூஆர் குறியீடுகளை (My QR) வங்கிச் செயலிகளில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இயந்திரங்களில் அதனை மக்கள் வருடும்போது 10 காசு அவர்களது கணக்கில் சேர்க்கப்படும் என்று டிபிஎஸ் வங்கி திங்கட்கிழமை (மார்ச் 2) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

சிங்கப்பூரில் அனைவரும் ‘பேலா’ செயலியைப் பயன்படுத்தலாம். அதற்கு டிபிஎஸ் அல்லது பிஓஎஸ்பி வங்கிக் கணக்குகள் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று வங்கி தெளிவுபடுத்தியது.

பயன்படுத்திய புட்டிகளையும் கலன்களையும் மறுசுழற்சி இயந்திரங்களில் போட்டு ‘கியூஆர்’குறியீட்டு முறையைக் கொண்டு மின்பணப்பையில் 10 காசு போடப்பட்டதும் அதனை உறுதிசெய்யும் குறுஞ்செய்தி கைப்பேசிகளுக்கு அனுப்பப்படும். அனைத்துப் பரிவர்த்தனைகளும் மின்னிலக்க முறையில் மட்டுமே நடைபெறும். பொதுமக்களுக்கென உதவித் தூதர்கள், இயந்திரங்கள் அமைந்திருக்கும் இடங்களில் சேவையாற்றுவார்கள்.

குறிப்புச் சொற்கள்
மறுபயனீடுடிபிஎஸ்வங்கிகட்டணம்