சிங்கப்பூர்ப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ‘டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ்’ குழுமம், 100 பில்லியன் அமெரிக்க டாலரை விஞ்சிய சந்தை மதிப்பு கொண்டுள்ள முதல் சிங்கப்பூர் நிறுவனமாகத் திகழ்கிறது.
தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய வங்கியான டிபிஎஸ்ஸின் பங்கு விலை, திங்கட்கிழமை (ஜூன் 9) பங்கு வணிகத்தின்போது 0.9 விழுக்காடு வரை கூடியது.
திங்கட்கிழமைக்கான பங்கு வணிகத்தின்போது, டிபிஎஸ் வங்கிப் பங்குகளின் மொத்தச் சந்தை மதிப்பு 129.2 பில்லியன் வெள்ளியாக உயர்ந்தது.
இவ்வாண்டில் அதன் சந்தை மதிப்பு நான்கு விழுக்காடு அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலரின்படி, டிபிஎஸ் பங்குகள் அடைந்த விலை உயர்வுக்கு டாலர் மதிப்பு சரிந்துள்ளதும் பங்களித்துள்ளது.
இவ்வாண்டு இதுவரையில் சிங்கப்பூர் வெள்ளி, அமெரிக்க டாலருக்கு நிகராக 6 விழுக்காடு கூடியுள்ளது.
டிபிஎஸ் பங்கு விலை திங்கட்கிழமை முடிவில் 45.49 வெள்ளியாக இருந்தது. கடந்த பிப்ரவரி 26ல் 46.67 வெள்ளியை எட்டியதே அதன் உச்ச மதிப்பு.
டிபிஎஸ்ஸின் தற்போதைய சந்தை மதிப்பின்படி, உலக வங்கிகளில் அது 22ஆம் இடத்தைப் பிடித்துள்ளதாக புளூம்பர்க் நிதியியல் ஊடகத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அத்துடன், ஆசியாவின் மூன்றாவது ஆகப் பெரிய சொத்து நிர்வாகியாகவும் டிபிஎஸ் திகழ்வதாக நிதித்துறை ஊடக நிறுவனமான ஏஷியன் பிரைவேட் பேங்கர் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
டிபிஎஸ் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக 15 ஆண்டுகாலம் செயல்பட்ட திரு பியூஷ் குப்தா, இவ்வாண்டு மார்ச் மாதத்துடன் அப்பொறுப்பிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.