தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூடுதல் லாபம் ஈட்டிய டிபிஎஸ்

2 mins read
2ff77784-9f5c-4513-b43a-858d0d8391c1
ஒவ்வொரு பங்குக்கும் 60 காசு இடைக்கால ஈவுத்தொகையை டிபிஸ் அறிவித்துள்ளது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய வங்கியான டிபிஎஸ், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் கூடுதல் லாபம் ஈட்டியுள்ளது. அது ஈட்டிய நிகர லாபம் ஒரு விழுக்காடு உயர்ந்தது.

வலுவான சொத்துக் கட்டணங்கள், வர்த்தக வருமானம் ஆகியவற்றால் அதன் லாபம் அதிகரித்துள்ளது.

டிபிஎஸ் குழுமத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் $2.82 பில்லியனாகப் பதிவானது.

ஓராண்டுக்கு முன்பு $2.8 பில்லியன் நிகர லாபத்தை அது ஈட்டியது.

இம்முறை அவ்வங்கி $2.79 பில்லியன் ஈட்டும் என்று புளூம்பர்க் நடத்திய ஆய்வில் பங்கெடுத்த பகுப்பாய்வாளர்கள் முன்னுரைத்திருந்தனர்.

ஆனால், எதிர்பார்க்கப்பட்டதைவிட டிபிஎஸ் அதிக லாபம் ஈட்டியுள்ளது.

இந்நிலையில், ஒவ்வொரு பங்குக்கும் 60 காசு இடைக்கால ஈவுத்தொகையை டிபிஸ் அறிவித்துள்ளது.

முதலீடு செய்தோருக்கு ஒரு பங்குக்கு 15 காசு என்ற அடிப்படையில் ஈவுத்தொகை வழங்கப்படும்.

ஈவுத்தொகையாக வழங்கப்படும் மொத்த தொகை ஏறத்தாழ $2.13 பில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

டிபிஎஸ் வங்கியின் 2025ஆம் ஆண்டுக்கான இலக்கில் மாற்றம் ஏதுமில்லை. குழுமத்தின் நிகர வட்டி வருமானம் 2024ஆம் ஆண்டைவிட அதிகமாக இருக்க வேண்டும் என அது இலக்கு கொண்டுள்ளது.

ஓராண்டுக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில், டிபிஎஸ் வங்கியின் முதல் ஆறு மாத நிகர லாபம் ஒரு விழுக்காடு குறைந்து $5.72 பில்லியனாகப் பதிவானது.

நிகர கட்டண, தரகுத் தொகை வருமானம் 17 விழுக்காடு ஏற்றம் கண்டு $2.44 பில்லியனாகப் பதிவானது.

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) காலை 9.25 மணிக்கு டிபிஎஸ் பங்குகளின் மதிப்பு 1.1 விழுக்காடு (52 காசு) உயர்ந்து $49.37ஆகப் பதிவானது.

அதே நாளன்று மற்றொர் உள்ளூர் வங்கியான யுஓபியின் வருமானம் 6 விழுக்காடு குறைந்து $1.34 பில்லியனாகப் பதிவானது.

யுஓபி வங்கியின் வருமானம் எதிர்பார்க்கப்பட்டதைவிட குறைவாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்