இவ்வாண்டில் டிபிஎஸ் வங்கிக் குழுமத்தின் அபாரமான பங்குவிலை ஏற்றம், சக உள்ளூர் வங்கிகளைவிட அதன் சந்தை மதிப்பைச் சாதனை அளவிற்கு உயர்த்தியுள்ளது.
இவ்வாண்டின் சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியின் பங்குகள் 21 விழுக்காடு ஏற்றம் கண்டதால் அதன் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட $26 பில்லியன் அதிகரித்துள்ளது.
இதனால், இரண்டாவது பெரிய கடன் வழங்குநரான ஓசிபிசி வங்கியுடன் ஒப்பிடும்போது, அதற்கும் டிபிஎஸ் வங்கிக்குமான சந்தை மதிப்பு இடைவெளியை $75 பில்லியனாக உயர்த்தியுள்ளது. யுஓபி வங்கியுடன் ஒப்பிடும்போது, டிபிஎஸ்சின் சந்தை மூலதன மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு விரிவடைந்துள்ளது.
தொடர்ந்து ஆறாவது நாளாக அக்டோபர் 3ஆம் தேதியன்று டிபிஎஸ்சின் பங்குவிலை உயர்ந்து, சாதனை அளவை நோக்கிச் சென்றது.
டிபிஎஸ்சின் லாப ஈவுத்தொகை மற்றும் செல்வ மேலாண்மைக் கண்ணோட்டத்தில் ஆய்வாளர்கள் பெரும்பாலும் நம்பிக்கையுடன் உள்ளனர்.
அண்மைப் பருவத்தில், வலுவான கடன் வருமானம், வர்த்தக லாபங்கள், நிர்வாகத்தின்கீழ் உள்ள சாதனை அளவிலான சொத்துகள் ஆகியவை குறைந்த வட்டி விகிதங்களால் ஏற்பட்ட இழுபறியை ஈடுகட்டியதால் மதிப்பீடுகளை முறியடித்து டிபிஎஸ் அதிக வருவாய் ஈட்டியது.
புளூம்பெர்க் தொகுத்த தரவுகளின்படி, யுஓபி உள்ளிட்ட சிங்கப்பூர் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள மூன்று வங்கிகளைப் பொறுத்தமட்டில், டிபிஎஸ் வங்கிப் பங்குகளை வாங்குமாறு அதிகமான பங்குச்சந்தை ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும், அவற்றுள் டிபிஎஸ் வங்கியே ஆக அதிகமாக, கிட்டத்தட்ட ஆறு விழுக்காடு ஈவுத்தொகை மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
இவ்வாண்டு மூன்றாம் காலாண்டின் தொடக்கத்திலிருந்து, ஆய்வாளர்கள் டிபிஎஸ்சின் வருவாய் மதிப்பீடுகளை கிட்டத்தட்ட 2 விழுக்காடு திருத்தியுள்ளனர். ஆனால், யுஓபி, ஓசிபிசி வங்கிகள் முறையே 3.6 விழுக்காடு மற்றும் 0.4 விழுக்காடு சரிவைக் கண்டன என்று புளூம்பெர்க் செய்தி குறிப்பிட்டுள்ளது.