டிபிஎஸ் குழுமம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒப்பந்த, தற்காலிக ஊழியர்கள் ஏறக்குறைய 4,000 பேரை ஆட்குறைப்பு செய்யத் திட்டமிடுவதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
மனிதர்கள் செய்யும் வேலைகள் பலவற்றைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செய்ய முடிவது இதற்குக் காரணம்.
டிபிஎஸ் குழுமத்தில் கிட்டத்தட்ட 8,000 முதல் 9,000 பேர் ஒப்பந்த, தற்காலிக ஊழியர்களாக வேலை செய்வதாக வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் குப்தா கூறியுள்ளார்.
புளூம்பெர்க்கின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் அவ்வாறு கூறினார்.
வங்கி அதன் செயல்பாட்டில் கூடுதலாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை அடுத்து அதன் ஊழியர் எண்ணிக்கையை மேலும் குறைக்கும் என்று பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலை திரு குப்தா உறுதிப்படுத்தினார்.
நிரந்தர ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்றார் அவர்.
உலகெங்கும் பல வங்கிகள் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் 200,000 பேரை ஆட்குறைப்பு செய்யவிருப்பதாகச் சென்ற மாதம் வெளியான புளூம்பெர்க் அறிக்கை குறிப்பிட்டது.
பிசினஸ் டைம்ஸ் கருத்தாய்வில் கலந்துகொண்ட தகவல், தொழில்நுட்பத் தலைமை அதிகாரிகள் பலரும், ஊழியரணியில் சராசரியாக மூன்று விழுக்காட்டினர் ஆட்குறைப்புக்கு ஆளாகக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் பல நிறுவனங்கள், தொழில்நுட்பத்தால் பதவிகள் மாற்றம் காணும் என்றும் ஒட்டுமொத்தமாக மனிதர்களின் இடத்தை அது எடுத்துக்கொள்ளாது என்றும் வலியுறுத்துகின்றன.
அண்மையில் டிபிஎஸ் வங்கி, சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான நிகர லாபம் ஓராண்டுக்கு முன்புடன் ஒப்புநோக்க 11 விழுக்காடு அதிகரித்ததாகத் தெரிவித்திருந்தது.
2024ன் இறுதிக் காலாண்டில் அதன் நிகர லாபம் S$2.52 பில்லியன் என்றும் அதற்கு முந்தைய காலாண்டில் அது S$2.27 பில்லியன் என்றும் தெரிவிக்கப்பட்டது.

