சிங்கப்பூரின் முன்னணி வங்கிகளில் ஒன்றான டிபிஎஸ் புகைமூட்டத்தால் பாதிப்படையக்கூடிய முதியோருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் உதவும் வகையில் ஒருவருக்கு தலா இரண்டு N95 முகக் கவசங்களை வழங்க முன்வந்துள்ளது.
டிபிஎஸ் வங்கி புகைமூட்ட நிவாரணத்திற்காக ஒதுக்கியுள்ள $1 மில்லியன் மதிப்புள்ள உதவி நிதியின் அங்கமான இத்திட்டத்தின் வழியாக 275,000 மக்கள் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதியோரின் நலனுக்கென சேவையாற்றும் தமது சமூகப் பங்காளிகளின் உதவியுடன் மூத்தோரின் பயன்பாடுக்கென காற்று சுத்திகரிப்புக் கருவிகளும் வழங்கப்படும் என்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) டிபிஎஸ் வங்கி அறிவித்தது.
இந்தோனீசியாவில் தொடர்ந்து எரிந்துவரும் காட்டுத் தீயின் தாக்கத்தால் சிங்கப்பூர் வாழ் மக்கள் பாதிப்படைந்துள்ள நேரத்தில் இந்த உதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
டிபிஎஸ் அறக்கட்டளையின் ஆதரவில் இயங்கும் சமூக உதவி அமைப்புகளுடன் இணைந்து 50,000 N95 வகை முகக் கவசங்களையும் 100 காற்று சுத்திகரிப்புக் கருவிகளையும் விநியோகம் செய்யவிருப்பதாக வங்கி அதன் அறிக்கையில் தெரிவித்தது. அல்கின் சிங்கப்பூர், லையன்ஸ் தோழர்கள், தை ஹுவா குவான் அறக்கட்டளைகள் போன்ற உதவி அமைப்புகள் அதில் அடங்கும்.
டிபிஎஸ் வங்கியின் தொண்டூழியர்கள் அந்த விநியோகத்தில் உதவுவர்.
அதே அற அமைப்புகளின் உதவியுடன் தனிமையில் வாழும் 500 மூத்த குடிமக்களுக்கு காற்று சுத்திகரிப்புக் கருவிகளை வழங்க டிபிஎஸ் திட்டமிட்டுள்ளது. அவ்வாறு தனிமைப் படுத்தப்பட்ட முதியோர்கள் அவர்களது இல்லங்களை விட்டு வேறு எங்கும் வெளியேற முடியாத நிலையில் உள்ளனர்.
மனிதவள அமைச்சுடன் ஒருங்கிணைந்து, பல வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிட உரிமையாளர்களின் உதவியுடன் 500,000 N95 முகக் கவசங்களை டிபிஎஸ் வங்கி வழங்கவுள்ளது.
செம்பவாங் பொழுதுபோக்கு வளாகத்தைத் தவிர்த்து, இங்கு இயங்கும் ஏழு வெளிநாட்டு ஊழியர் பொழுதுபோக்கு நிலையங்களில் முதலில் வருவோருக்கு முதல் சலுகை என்ற அடிப்படையில் முகக் கவசங்கள் விநியோகிக்கப்படும். அந்த செயல்பாடு அக்டோபர் 25ஆம் தேதி நண்பகல் முதல் தொடங்கும்.
டிபிஎஸ் வங்கி அதன் சொந்த ஊழியர்களுக்கும் புகைமூட்டத்தை சமாளிக்கும் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அவர்களுக்கும் N95 முகக் கவசங்கள் வழங்கப்பட்டதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு நீக்குப்போக்கான வேலை நேரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாக அது தெரிவித்தது.
சமூகத்துக்கு ஏற்ற வகையில் மாறுபடும் தேவைகளுக்கு உகந்த ஆதரவுத் திட்டங்கள் வழங்கப்படும் எனவும் அதன் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் வங்கி விளக்கியது.
