டிபிஎஸ் வங்கியின் ‘பேநவ்’ சேவை செவ்வாய்கிழமை பிற்பகல் சிறிது நேரம் தடைபட்டது. அந்தச் சேவையைப் பயன்படுத்திய சில வாடிக்கையாளர்களுக்குப் பணப்பரிவர்த்தனையில் தாமதமும் சிக்கலும் ஏற்பட்டன.
சேவைத் தடை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களைக் கண்காணிக்கும் ‘டௌன்டிடெக்டர்’ இணையத்தளம், செவ்வாய்கிழமை பிற்பகல் 3.53 மணியளவில் டிபிஎஸ் வங்கியின் ‘பேநவ்’ சேவை பாதிப்பு குறித்துக் கிட்டத்தட்ட163 புகார்கள் செய்யப்பட்டதாகக் கூறியது.
வாடிக்கையாளர் ஒருவர் பணப் பரிவர்த்தனைக்குப் பிறகு, இருமுறை தன் கணக்கில் இருந்து தொகை கழிக்கப்பட்டதாகக் கூறினார்.
பேநவ் சேவையில் பணப் பரிவர்த்தனை முடிந்த பிறகு ‘நிலுவை’ என்று செய்தி வந்ததாகச் சிலர் கூறினர்.
வேறு ஒரு கணக்கிற்கு அனுப்பப்பட்ட தொகை அனுப்புநரின் கணக்கில் இருந்து கழிக்கப்பட்டுவிட்டது; ஆனால், பெறுநரின் வங்கிக் கணக்கிற்கு அந்தத் தொகை சென்று சேரவில்லை என வாடிக்கையாளர்கள் டிபிஎஸ் வங்கியின் ஃபேஸ்புக் பக்கத்தில் புகார் அளித்தனர்.
இந்தச் சிக்கலை மாலை 4.30 மணியளவில் சரிசெய்துவிட்டதாக டிபிஎஸ் வங்கியின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.