தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஸ்ஜி60 சலுகைகளை அறிமுகப்படுத்திய டிபிஎஸ்/பிஓஎஸ்பி

2 mins read
05c41a18-7c4c-4931-9f38-da2d9bea72be
சனிக்கிழமை (மார்ச் 15) தியோங் பாரு பிளாசா கடைத்தொகுதியில் டிபிஎஸ்/பிஓஎஸ்பி வங்கி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங்கும் கலாசார, சமூக, இளையர்த்துறை அமைச்சு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் திரு எரிக் சுவாவும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் அவர்கள் இருவரும் கலந்துரையாடினர். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரின் 60வது தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, டிபிஎஸ்/பிஓஎஸ்பி வங்கி ஓராண்டுக் கால சிறப்புச் சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அவற்றில் 60 காசு மளிகைப் பொருள், உணவுச் சலுகையும் அடங்கும்.

சலுகைகள் வழங்குவதுடன் எளிதில் பாதிப்படையக்கூடிய மூத்தோரின் நல்வாழ்வை மேம்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளை டிபிஎஸ்/பிஓஎஸ்பி வங்கி தீவிரப்படுத்துகிறது.

அங் மோ கியோ, குவீன்ஸ்டவுன், பிடோக் போன்ற முதிர்ச்சியடைந்த குடியிருப்புப் பேட்டைகளில் வசிக்கும் மூத்தோருக்குத் தனது ஊழியர்கள் உதவுவர் என்று அது கூறியது.

மூத்தோரின் ஊட்டச்சத்து, சமூக இணைப்பு ஆகியவற்றை மேம்படுத்த உதவி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

எஸ்ஜி60 கொண்டாட்டங்களை முன்னிட்டு இவ்வாண்டு முழுவதும் தனது சமூகப் பணிகள் இரண்டு மடங்கு அதிகரிக்கப்படும் என்று டிபிஎஸ்/பிஓஎஸ்பி கூறியது.

60 எனும் எண்ணைக் கருப்பொருளாகக் கொண்டு பல சலுகைகளை வங்கி அறிமுகப்படுத்துகிறது.

அவற்றை ‘பிஓஎஸ்பி எவ்ரிடே’ அட்டை மற்றும் ‘பேஷன் பிஓஎஸ்பி’ பற்று அட்டை மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

வழங்கப்படும் சலுகைகளில் ஷெங் சியோங் பேரங்காடியிலிருந்து வாடிக்கையாளர்கள் ஒரு கிலோ அரிசியை 60 காசுக்கு வாங்கலாம்.

500 மில்லிலிட்டர் எண்ணெய்யையும் 60 காசுக்கு வாங்கலாம்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பொருளுக்கான முதல் 50,000 பரிவர்த்தனைகளுக்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும்.

இப்போதிலிருந்து ஜூன் மாதம் 30 தேதி வரை இச்சலுகை வழங்கப்படும்.

ஜூலை மாதம் 1ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை திட்டத்தில் பங்கேற்கும் உணவு, பானக் கடைகளில் 60 காசுக்கு உணவு வாங்கலாம்.

அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை பங்கேற்கும் சுற்றுலாத் தளங்களுக்கான நுழைவுச்சீட்டுகளுக்கு 60 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும்.

இவை தொடர்பான கூடுதல் விவரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும்.

இந்நிலையில், சனிக்கிழமை (மார்ச் 15) தியோங் பாரு பிளாசா கடைத்தொகுதியில் டிபிஎஸ்/பிஓஎஸ்பி வங்கி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங்கும் கலாசார, சமூக, இளையர்த்துறை அமைச்சு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் திரு எரிக் சுவாவும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் அவர்கள் இருவரும் கலந்துரையாடினர்.

குவீன்ஸ்டவுன் குடியிருப்பாளர்களின் நலனில் திரு சுவாவும் தஞ்சோங் பகார் குழுத் தொகுதியின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து கவனம் செலுத்துவர் என்று தஞ்சோங் பகார் குழுத் தொகுதிக்குத் தலைமை வகிக்கும் அமைச்சரான திரு சான் உறுதி அளித்தார்.

குறிப்புச் சொற்கள்