கிட்டத்தட்ட 2,250 தாய்மார்களுக்கு ஆதரவளிக்க டிபிஎஸ் அறக்கட்டளை $6.5 மில்லியன் வழங்க உள்ளது.
டிபிஎஸ் அறக்கட்டளையும் ‘கிட்ஸ்டார்ட்’ திட்டமும் இணைந்து “கர்ப்பிணி மற்றும் குழந்தைத் திட்டம்’ என்ற முயற்சியை சனிக்கிழமை (செப்டம்பர் 27) சிங்கப்பூர்க் கலைப்பள்ளியில் அறிமுகப்படுத்தின.
இத்திட்டத்தின்வழி அடுத்த மூன்று ஆண்டுகளில் கருவுற்றிருக்கும் பெண்களுக்கு ஆதரவு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கலந்துகொண்டார்.
“குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து, மனநல, நிதி அறிவை மேம்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது,” என்றார் அமைச்சர் மசகோஸ்.
இந்தத் திட்டத்தின்கீழ் கருவுற்ற பெண்களுக்கு தலையணை, பால் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும்.
அத்துடன், மனநலப் பயிலரங்கு, குடும்ப நிதி நிர்வகிப்பது சார்ந்த உரையாடல்களிலும் கருவுற்ற மாதர் கலந்துகொள்வர்.
குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு $300 மதிப்புள்ள பேரங்காடிப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு தேசிய தினப் பேரணி உரையின்போது ‘நாம் முதல்’ என்ற மனப்பான்மையைப் பற்றி பிரதமர் லாரன்ஸ் வோங் பேசியதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் மசகோஸ், “குடும்பங்களை மேம்படுத்துவதும் ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ்க்கையில் ஒரு நல்ல தொடக்கத்தை வழங்குவதும் ஒட்டுமொத்த சமூகத்தின் முயற்சியாகும்,” என்றார்.
நிகழ்ச்சியில் மனநலம், நிதிக் கல்வியறிவு பயிலரங்குகள் இடம்பெற்றன. குழந்தைகளுக்கான நடவடிக்கை அங்கங்கள் சிறாரை மகிழ்வித்தன.
நிகழ்ச்சியில் ஏறத்தாழ 50 கருவுற்ற பெண்களும் குடும்பங்களும் தொண்டூழியர்களும் கலந்துகொண்டனர்.
அவர்களில் தமது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆயிஷா சித்திக்கா ரஃபீக் இம்முயற்சியைப் பெரிதும் பாராட்டினார்.
“பொதுவாக, என்னைப் போன்ற தாய்மார்கள் தங்கள் சொந்த நலனைவிட பிள்ளையின் நலனுக்கே முதலிடம் அளிக்கின்றனர். இந்த முயற்சி எங்களிடம் தொடங்குவதால் பிறக்கும் குழந்தையின் நலனும் மேம்படுகிறது,” என்று தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் தாய்மார்களுக்கு நிதியறிவு மற்றும் மனநலனுக்கு உதவும் பயிலரங்குகள் அதிகமாக இருக்க வேண்டும் என்று கருத்துரைத்தார் திருவாட்டி ஆயிஷா.
ஒற்றைப் பெற்றோரான அவர், குறிப்பாக தம்மைப் போன்ற தாய்மார்களுக்கு இந்த முயற்சிகள் உதவும் என்று தெரிவித்தார்.
“இந்தப் பயணத்தில் நாங்கள் தனித்துச் செல்லத் தேவையில்லை என்பதை இந்த ஆதரவு உறுதிசெய்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.