சிங்கப்பூரின் ஆகப்பெரிய வங்கியான டிபிஎஸ் வங்கி தனது முதலாம் காலாண்டு நிகர லாபம் 2 விழுக்காடு குறைந்துவிட்டதாகவும் ஆண்டு அடிப்படையிலான நிலவரம் இது என்றும் அறிவித்து உள்ளது.
2022ஆம் ஆண்டு முதலாம் காலாண்டுக்குப் பின்னர் டிபிஎஸ் வங்கியின் லாபம் குறைந்து இருப்பது இதுவே முதல்முறை. அதற்கு அதிகமான வரிச்செலவுகள் அந்தச் சரிவுக்கு முக்கிய காரணமாக வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
இவ்வாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான டிபிஎஸ் வங்கியின் நிகர லாபம் $2.89 பில்லியன். 2024 மார்ச் காலாண்டு முடிவில் அது $2.95 பில்லியனாக இருந்தது.
இருப்பினும், லாபம் $2.87 பில்லியனாக இருக்கும் என்று புளூம்பெர்க் கணித்து இருந்தைக் காட்டிலும் அதிகமான லாபம் பதிவாகி இருக்கிறது.
உலகளாவிய குறைந்தபட்ச வரி 15 விழுக்காடு நடப்புக்கு வந்ததால் தனது லாபம் சரிந்ததாக டிபிஎஸ் கூறியுள்ளது.
வரிகளை நீக்கிவிட்டுக் கணக்கிடுகையில், டிபிஎஸ் வங்கியின் லாபம் $3.44 பில்லியன் என்னும் சாதனை அளவைத் தொட்டுள்ளது. மேலும், ஆண்டு அடிப்படையில் அது 1 விழுக்காடு அதிகம்.
முதலாம் காலாண்டுக்கான வர்த்தக நிலவர அறிக்கையை டிபிஎஸ் வங்கி வியாழக்கிழமை (மே 8) காலை வெளியிட்டதும் அதன் பங்கு விலை 2.1 விழுக்காடு உயர்ந்தது. பின்னர், காலை 10 மணியளவில் விலையேற்ற வேகம் சற்று தணிந்து 0.6 விழுக்காடு உயர்வுடன் ஒரு பங்கின் விலை $43 என்று வர்த்தகமானது.
நிச்சயமற்ற நிலவரப்போக்கு அதிகரித்து வருவதால் இவ்வாண்டின் வங்கி வர்த்தகம் சவால்களை எதிர்நோக்குவதாக டிபிஎஸ் வங்கி கூறியுள்ளது. இவ்வாண்டு முழுமைக்குமான நிகர லாபம் உலகளாவிய குறைந்தபட்ச வரி காரணமாக கடந்த ஆண்டின் அளவைக் காட்டிலும் குறையும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அது தெரிவித்து உள்ளது.