டிபிஎஸ் வங்கி தனது இணைய வங்கி வாடிக்கையாளர்களுக்காகப் புதிய மோசடித் தடுப்பு நடவடிக்கைகளை அறிமுகம் செய்கிறது.
அதன் காரணமாக, அதிகமான டிபிஎஸ் வாடிக்கையாளர்கள் தங்களது பணப் பரிமாற்றங்களின் தன்மை குறித்து விசாரணை அடிப்படையிலான கேள்விகளை எதிர்பார்க்கலாம்.
அதிக ஆபத்துள்ள நிதிப் பரிமாற்றங்களைச் செய்யும்போது, பரிமாற்றம் கோருபவரின் அடையாளம் போன்ற கேள்விகளுக்கு, வரும் மாதங்களில் வாடிக்கையாளர்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும்.
அவர்கள் தெரிவிக்கும் பதிலைப் பொறுத்து வங்கி அதில் தலையிடும் என்று டிபிஎஸ் வங்கியின் மோசடித் தடுப்பு ஆலோசனைப் பிரிவின் தலைவர் யின் ஜுவோன் கியாங் தெரிவித்துள்ளார்.
எந்த வகையிலான தலையீடு என்பது தெரிவிக்கப்படாது. தலையீட்டில் தெரியவரும் தகவல்களைப் பொறுத்து பணப் பரிமாற்றத்தை வங்கி தாமதப்படுத்தும் அல்லது தற்காலிகமாக தடுத்துநிறுத்தும்.
பாதிக்கப்பட்டவர்கள் தெரிந்தே பணம் அனுப்புவதால் ஏற்படும் மோசடிகளைத் தடுக்க அந்தப் புதிய நடவடிக்கையை வங்கி அறிமுகம் செய்வதாக அவர் கூறினார்.
பணம் பெறுபவரைப் புதிதாகச் சேர்ப்பது, பணப் பரிமாற்ற வரம்புகளை அதிகரிப்பது உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும்போது, தனிப்பயனாக்கப்பட்ட செயலி வாயிலான அறிவிப்புகள் செயல்படுத்தப்படும்.
“எந்த ஒரு முதலீடு தொடர்பாகவும் பணம் அனுப்புமாறு உங்களிடம் கேட்கப்பட்டதா? பணம் பெறுபவரை நீங்கள் நேரில் சந்தித்ததுண்டா?” என்பன போன்ற விசாரணை அடிப்படையிலான கேள்விகள் கேட்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
வயதில் மூத்த வாடிக்கையாளர்களுக்கு தெளிவாகத் தெரியும்படி பெரிய எழுத்துகளில் அத்தகைய கேள்விகள் இடம்பெறும்.
நடப்பில் உள்ள கேள்விகளுக்குக் கூடுதலாக இந்தத் தனிப்பயனாக்கக் கேள்விகள் கேட்கப்படும்.
“புதிதாகச் சேர்க்கும் பணம் பெறுபவரை உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா? பணம் அனுப்பச் சொல்லி உங்களை ஏமாற்ற மோசடிக்காரர்கள் புதிது புதிதாகத் தந்திரங்களைக் கடைப்பிடிப்பது பற்றி தெரியுமா? மோசடி செய்யப்படுவதாக சந்தேகம் எழுந்தால் பரிவர்த்தனையை மேற்கொண்டு தொடரவேண்டாம்,” - இந்தக் கேள்விகளும் ஆலோசனைகளும் தற்போது நடப்பில் உள்ளவை.

