நிதி அபாயங்களைக் குறைக்க முயல்கிறது டிபிஎஸ்

யுஎஸ்$1 பில்லியன் மதிப்புள்ள இடர் பரிமாற்ற ஒப்பந்தம்

நிதி அபாயங்களைக் குறைக்க முயல்கிறது டிபிஎஸ்

2 mins read
e3a244f8-7f5d-40c0-a3ab-47990423c813
எதிர்காலத்தில் மேலும் பல எஸ்ஆர்டி பரிவர்த்தனைகளைத் தெரிவுசெய்து செயல்படுத்துவதற்கான அடித்தளத்தைப் புதிய ஒப்பந்தம் நிறுவியிருப்பதாக டிபிஎஸ் தெரிவித்தது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

டிபிஎஸ் வங்கி, முக்கிய இடர் பரிமாற்ற ஒப்பந்தமொன்றை நிறைவு செய்திருக்கிறது.

வங்கி, ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிறுவனக் கடன்களைக் கொண்ட தொகுப்பைக் குறிப்பிட்டு இந்தத் தகவலை வெளியிட்டது.

சிங்கப்பூர் வங்கி ஒன்று அத்தகைய ஒப்பந்தத்தை மேற்கொள்வது இதுவே முதல் முறை என்று டிபிஎ‌ஸ் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) தெரிவித்துள்ளது.

எஸ்ஆர்டி என்று வழங்கப்படும் அது, மூலதன மேலாண்மைப் பரிவர்த்தனையைக் குறிக்கிறது. ஒரு வங்கி, அதன் கடன்களின் அடிப்படையான சொத்துகளை விற்காமல், கடன் அபாயத்தின் ஒரு பகுதியை மூன்றாம் தரப்பு முதலீட்டாளர்களுக்கு மாற்ற இது அனுமதிக்கிறது.

இந்த ஏற்பாட்டின்கீழ், குறிப்பிட்ட கடன் அபாயத்தின் ஒரு பகுதியை முதலீட்டாளர்கள் ஏற்றுக்கொள்வர். அதற்கு ஈடாக, அதேபோன்ற தரமதிப்பீட்டைக் கொண்ட பாரம்பரியப் பங்குப் பத்திரங்களைவிடக் கூடுதல் வட்டி ஆதாயத்தை அவர்கள் பெறுவர்.

அதேநேரம், வங்கி தொடர்ந்து அந்தக் கடன்களை அதன் வசம் வைத்திருக்கவும் அதற்கான சேவைகளை வழங்கவும் இது வகைசெய்யும்.

டிபிஎஸ் வங்கி அதன் அறிவிப்பில், மூன்றாம் தரப்பு முதலீட்டாளர்கள் யாவர் என்பதைக் குறிப்பிடவில்லை.

புதிய ஒப்பந்தம் நிதியைச் சிறந்த முறையில் நிர்வகிக்க வங்கிக்கு உதவியாக இருக்கும். வங்கிச் சட்டப்படி, சொத்துகளுக்கு எதிராக வைத்திருக்க வேண்டிய மூலதனத்தை இது குறைக்கிறது. புதிய கடன்களைக் கொடுக்கவும் வளர்ச்சி வாய்ப்புகளில் வேறு முதலீடுகளைச் செய்யவும் மூலதனத்தைப் பயன்படுத்த அது வகைசெய்கிறது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“டிபிஎஸ் வங்கியின் மூலதன விகிதங்கள், கட்டுப்பாட்டுத் தேவைகளைவிட அதிகமாக உள்ளன. ஆயினும் இந்தப் புதிய ஆற்றல், ஆசியாவில் அதிகரித்துவரும் நிதித் தேவையை ஆதரிப்பதற்கான வங்கியின் திறனை மேம்படுத்துகிறது. அத்துடன் தற்போது மேற்கொள்ளப்படும் வங்கியின் மூலதன மேலாண்மைத் தொகுப்பின் விரிவாக்கத்தையும் இது பிரதிபலிக்கிறது,” என்று வங்கி தெரிவித்தது.

எதிர்காலத்தில் வங்கி மேலும் பல எஸ்ஆர்டி பரிவர்த்தனைகளைத் தெரிவுசெய்து செயல்படுத்துவதற்கான அடித்தளத்தையும் புதிய ஒப்பந்தம் நிறுவியிருப்பதாக டிபிஎஸ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
டிபிஎஸ்வங்கிபத்திரம்நிதிமுதலீடு