தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவின் அலையன்ஸ் வங்கியில் பங்கு வாங்கும் டிபிஎஸ் திட்டத்தில் தேக்கம்: நம்பத்தகுந்த வட்டாரங்கள்

2 mins read
880e7a24-560d-4b14-b177-01224cb9792c
வெர்ட்டிக்கல் நிறுவனம் அலையன்ஸ் வங்கியில் தனக்குள்ள 29 விழுக்காட்டுப் பங்கை டிபிஎஸ் வங்கிக்கு விற்பது குறித்துப் பரிசீலிப்பதாக ஜனவரியில் புளூம்பெர்க் செய்தி வெளியிட்டிருந்தது. - படம்: தி ஸ்டார் பப்ளிகே‌ஷன்

மலேசியாவின் அலையன்ஸ் வங்கியில் குறிப்பிட்ட பங்கை வாங்கும் டிபிஎஸ் குழுமத்தின் திட்டத்தில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

அதன் தொடர்பில் சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு டிபிஎஸ் குழுமமும் அலையன்ஸ் வங்கியின் ஆகப் பெரிய பங்குதாரருமான வெர்ட்டிக்கல் தீம் நிறுவனமும் மலேசியாவின் மத்திய வங்கிக்குத் தனித்தனியே விண்ணப்பம் செய்திருந்தன. இருப்பினும் இதுவரை அவற்றுக்கு எந்தப் பதிலும் மத்திய வங்கியிடமிருந்து கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.

மலேசிய விதிமுறைகளின்படி பங்குகளை வாங்குவது குறித்த பேச்சைத் தொடங்குவதற்கு மத்திய வங்கியின் ஒப்புதலைப் பெறவேண்டியது அவசியம்.

வெர்ட்டிக்கல் நிறுவனம், அலையன்ஸ் வங்கியில் தனக்குள்ள 29 விழுக்காட்டுப் பங்கை டிபிஎஸ் வங்கிக்கு விற்பது குறித்துப் பரிசீலிப்பதாக ஜனவரியில் புளூம்பெர்க் செய்தி வெளியிட்டிருந்தது. மலேசிய நிறுவனமான வெர்ட்டிக்கல் தீமுக்குச் சிங்கப்பூர் அரசாங்கத்தின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக் ஆதரவளிக்கிறது.  

ஒப்பந்தம் கைகூடினால் டிபிஎஸ், அலையன்ஸ் வங்கியில் தனக்குள்ள பங்கை 49 விழுக்காடு வரை உயர்த்தவும் எண்ணக்கூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறின.

தற்போதைய நிலைப்படி, வர்த்தக வங்கிகளில் வெளிநாட்டு நிறுவனத்தின் பங்கு 30 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது என்று வரம்பு விதித்துள்ளது மலேசியா. இருப்பினும் சில துறைகளில் அரசாங்கம் அந்த வரம்பைச் சற்றுத் தளர்த்தக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.

டிபிஎஸ், வெர்ட்டிக்கல் தீம் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த விவகாரம் குறித்துக் கருத்துக்கூற மறுத்துவிட்டனர். இதுபற்றித் தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்கிறது அலையன்ஸ் வங்கி.

ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்கை வாங்குவது அல்லது விற்பது தொடர்பிலான விண்ணப்பங்கள் குறித்துப் பொதுவெளியில் கருத்துக் கூறுவதில்லை என்பது தனது கொள்கை என்கிறது மலேசியாவின் மத்திய வங்கி.

குறிப்புச் சொற்கள்