லிட்டில் இந்தியா வட்டாரம் அருகில் உள்ள கிச்சனர் ரோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கைகலப்புச் சம்பவத்தின் தொடர்பில் ஆறு பேர் மீது திங்கட்கிழமை (செப்டம்பர் 23) குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
அவர்களில் 22 வயது இளையரான முகம்மது சஜித் சலீம் என்பவர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தினேஷ் வாசீ, 25, என்பவருக்கு மரணம் விளைவித்ததாக அவர் மீதான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எஞ்சிய ஐவரில் இருவர் பெண்கள். பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக அந்த ஐவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொலைக் குற்றம் சுமத்தப்படுவதாக தமிழில் வாசிக்கப்பட்டபோது நீதிமன்றத்தின் பார்வையாளர் பகுதியில் முன்வரிசையில் இருந்த பெண் ஒருவர் அழுது புலம்பியவாறே நிலைகுலைந்து சரிந்தார். உறவினர்கள் அந்தப் பெண்ணைத் தூக்கி அமர வைத்தனர்.
கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஐவர் விவரம்: சதிஷ் ஜேசன் பிரபாஸ், 23, கிர்த்திக் ரோஷன் பிரேம் ஆனந்த், 22, பிரதாவ் சஷிகுமார், 20, நூர் டியானா ஹாருன் அல் ரஷீத், 24, கஸ்தூரி காளிதாஸ் மாரிமுத்து, 24.
கலவரத்தின்போது இவர்களில் குறைந்தபட்சம் ஒருவர் பயங்கர ஆயுதம் வைத்திருந்ததாகவும் மரணமடைந்த தினேஷுடன் நவீன்ஜெய் சி நாதன், கே விக்னேஷ் ஆகியோரும் காயமடைந்ததாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கிச்சனர் ரோடு அருகில் உள்ள வெர்டன் ரோட்டில் உள்ள உணவகம் ஒன்றில் நிகழ்ந்த சம்பவம் குறித்து செப்டம்பர் 22 (ஞாயிறு) அதிகாலை 4.05 மணியளவில் தனக்கு அழைப்பு வந்ததாக காவல்துறை கூறியது.
சம்பவ இடத்தில் சுயநினைவின்றி காணப்பட்ட 24 வயது, 25 வயது இளையர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 25 வயது இளையர் பின்னர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம். பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்ட குற்றத்துக்கு பத்து ஆண்டுச் சிறையும் பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்படலாம்.