தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தந்தையின் கல்லறைக்குச் சென்றவழியில் விபத்தில் சிக்கி மகன் மரணம்

1 mins read
d3ff0ef4-d2be-421a-bcd0-c7036f318394
விபத்தில் சிக்கி நிலைகுலைந்து கிடக்கும் மோட்டர்சைக்கிள். - படம்: சின் மின் நாளிதழ்

மறைந்த தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரின் கல்லறைக்கு மோட்டர் சைக்கிளில் சென்ற 27 வயது மகன், விபத்தில் சிக்கி மாண்டார்.

செம்பவாங்கில் உள்ள சந்திப்பு ஒன்றில் வேனுடன் அந்த இளையர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய முகமது சயாகீர் ரோஸ்லி, மே 14 ஆம் தேதி பிற்பகல் சுமார் 2.45 மணியளவில் செம்பவாங் சாலையில் சென்றார்.

அப்போது அவ்வழியே சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று திடீரென்று லோரோங் செஞ்சாரு நோக்கி திரும்பியதாகச் சொல்லப்படுகிறது.

இதனால், நிலைதடுமாறி சயாகீர் ஓட்டி வந்த மோட்டர்சைக்கிள் வேனுடன் மோதியது.

விபத்தில் மோட்டர்சைக்கிளிலிருந்து தூக்கிவீசப்பட்ட அவர், பலத்த காயமடைந்தார்.

சுயநினைவின்றி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கவனக்குறைவாக மற்றவரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 75 வயது வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

“தந்தையின் நினைவு வரும்போதெல்லாம் அஞ்சலி செலுத்த சயாகீர், தந்தையின் கல்லறைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அன்றைய தினமும் அதே போலவே அங்கு சென்றார். ஆனால், இவ்வாறு நடக்கும் என நாங்கள் யாரும் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை,” என சயாகீரின் வருங்கால மனைவி 27 வயது யுன் வூ, ஷின் மின் நாளிதழிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்