அரசாங்க அமைச்சர்களின் சம்பளம் குறித்து இவ்வாரம் நாடாளுமன்றத்தில் எழுந்த விவாதம் நெடுநாள் பரபரப்பாக நீடிக்கும் என்று எதிர்பார்த்தோருக்கு அது இடம்பெறாதது சற்று சலிப்படையச் செய்திருக்கும்.
சிங்கப்பூரர்களின் மனங்களை வெகுவாக பாதிக்கும் அந்த விவகாரம் பலரின் எதிர்பார்ப்புகளைத் தகர்த்து விரைவாகவே முடிவுக்கு வந்தது. ஒப்புநோக்க, கடந்த 2012ஆம் ஆண்டில் அமைச்சர்களின் சம்பளம் குறித்த புதிய சட்ட வரைவுகள் மிகவும் ஆழமாக நாடாளுமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டன.
தற்போதைய நிலவரப்படி, மக்கள் செயல் கட்சியும், பாட்டாளிக் கட்சியும் ஒருவித புரிந்துணர்வை எட்டியுள்ளதை அண்மைய அமைச்சர்களின் சம்பளம் சார்ந்த விவாதங்கள் காட்டுகின்றன என்று இதனைத் தொடர்ந்து கவனிப்போர் உணர்வர்.
இதற்கிடையே சர்ச்சைக்குரிய விவாதங்கள் தொடராமல் இருப்பது, ஆளும் மக்கள் செயல் கட்சிக்கு நன்மையாகவே அமைந்துவிட்டது.
பிரதமர் லாரன்ஸ் வோங், புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைக்கவும், தலைமைத்துவ மாற்றத்துக்கு நிலையான அடித்தளத்தை அமைப்பதில் அதிக கவனம் செலுத்தவும் இது அவருக்குக் கால அவகாசத்தை வழங்குகிறது.
ஏனெனில் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் சம்பளம் குறித்து கேள்விகளைத் தொடர்ந்து முன்வைத்தால் அதனை நேரம் செலவிட்டு பிரதமர் விளக்கமளிக்க நேரிடும்.
அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சியினருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அமைச்சர்கள் சம்பளத்தை நிர்ணயிக்கப் பயன்பட்ட மூன்று கொள்கைகளை இரு தரப்பும் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொண்டன.
சந்தை நிலவரத்தைக் கருத்தில்வைத்து நாட்டை வழிநடத்த சிறந்த மனிதர்களைத் தேர்வு செய்தல், அரசியல் சேவையின் மாண்பைப் பிரதிபலிக்கும் வகையில் ஊதியத்தில் கழிவுகள் வழங்குதல், வெளிப்படையான முறையில் ஒருவரின் சேவைத் திறனையும் நாட்டுக்கு ஏற்படக்கூடிய நலன்களையும் முன்வைத்து ஊதியம் அமைதல் ஆகிய மூன்றும் அந்தக் கொள்கைகள் ஆகும்.

