சிங்கப்பூரில் உள்ள வங்கிகள் இளம் வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
ஓசிபிசி வங்கி, ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கி, கட்டண அட்டை நிறுவனமான டிசிஎஸ் கார்ட் சென்டர் இம்மூன்றும் இளம் வயதினரை இலக்காகக் கொண்டு அக்டோபரில் புதிய அட்டைகளை அறிமுகம் செய்தன.
இளம் வயதினரின் கவனத்தை ஈர்த்து, நீண்டகால வாடிக்கையாளர்களாவர் என்ற நம்பிக்கையில் அவர்களின் விசுவாசத்தைப் பெற வங்கிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அக்டோபர் 15ஆம் தேதி வெளியிடப்பட்ட ஸ்டாண்டர்ட் சார்டர்ட் ரொக்கக் கழிவு அட்டை, 13க்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டவர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
ஓசிபிசியின் ரொக்கக் கழிவு அட்டை, ஏழுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்டவர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
டிசிஎஸ், ‘ஃபிளெக்ஸ்’ எனும் அதன் முதல் கடன்பற்று அட்டையை அறிமுகம் செய்துள்ளது. அது 18 முதல் 35 வயதுப் பிரிவினரை இலக்காகக் கொண்டுள்ளது.
டிபிஎஸ் வங்கி, இளையர்களை நோக்கமாகக் கொண்ட டிக்டாக் ஷாப், ஷாப்பி, செஃபோரா போன்ற சின்னங்களுடன் பங்காளித்துவ முயற்சியில் இறங்கியுள்ளதாக அதன் கட்டணங்கள், தளங்கள் பிரிவுத் தலைவர் ஆண்டனி சியாவ் கூறினார்.
‘யுஓபி ஒன்’ ரொக்கக் கழிவு அட்டை வைத்திருப்போருக்கான பிரத்தியேக இயக்கங்களை யுஓபி வங்கி நடத்தி வருகிறது.