சிங்கப்பூர் குடும்பங்களின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. 2025ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் கடன்கள் 7.4 விழுக்காடு அதிகரித்துள்ளன. இது 2021ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்குப் பிறகு பதிவான அதிவேக அதிகரிப்பாகும்.
மேலும், கடன் அளவு தொடர்ந்து அதிகரிப்பது இது ஒன்பதாவது காலாண்டாகும்.
குறிப்பாக, 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக 2025ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் குடும்பச் சொத்துகளின் வளர்ச்சியை (7.3%) விட, குடும்பக் கடன்களின் அதிகரிப்பு (7.4%) வேகமாக இருந்தது கவனிக்கத்தக்கது.
பிப்ரவரி 26ஆம் தேதியன்று புள்ளிவிவரத் துறை வெளியிட்ட தரவுகள், வீட்டுப் பொறுப்புகள் தொடர்பான கடன் அதிகரிப்புக்கு வீட்டுக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் ஆகிய இரண்டின் அதிகரிப்பே காரணம் எனக் காட்டுகின்றன.
2025ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் வீட்டுக் கடன்கள் 5.4 விழுக்காடு உயர்ந்து $292.3 பில்லியன் ஆகியுள்ளன.
சிங்கப்பூர் குடும்பங்களைப் பொறுத்தவரை, வீட்டுக் கடனே மிகப் பெரிய கடனாக உள்ளது.
இது மொத்தக் கடனில் குறைந்தது 70 விழுக்காடாகும்.
இருப்பினும், வீட்டுக் கடன் சூழல் இன்னும் கட்டுக்குள்ளேயே இருப்பதாக புள்ளிவிவரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. தனிநபர் செலவிடக்கூடிய வருமானத்தில் வீட்டுக் கடன்களின் பங்கு கடந்த நான்கு ஆண்டுகளில் குறைந்து வரும் போக்கைக் கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஒரு குடும்பத்தின் வருமானத்தில் எந்த அளவுக்கு அடமானக் கடனுக்காகச் செலவிடப்படுகிறது என்பதை நிதிக் சுமை அளவீடு காட்டுகிறது. இந்த விகிதம் அதிகமாக இருந்தால், நிதிச் சுமை அதிகமாக இருப்பதாகப் பொருள்.
இது 2025ஆம் ஆண்டில் 75 விழுக்காடு முதல் 77 விழுக்காடு வரை பதிவானது.
2024ஆம் ஆண்டில் நிதிச் சுமை அளவீடு 80 விழுக்காட்டிலிருந்து 81 விழுக்காடாக இருந்தது.
தனிநபர் கடன்களில் 12.8 விழுக்காடு அதிகரிப்பு 2025ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் வீட்டுப் பொறுப்புகள் தொடர்பான கடன்கள் அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணமாகும். இது $115.2 பில்லியனாக உயர்ந்துள்ளது.
கார்களுக்கான கடன்கள், கடன் அட்டைகள், கல்விக்கான கடன்கள் மற்றும் வீட்டைப் புதுப்பிப்பதற்கான கடன்கள் ஆகியவை தனிநபர் கடன்களின்கீழ் வருகின்றன.
கடன் அட்டை நிலுவை: வங்கிகளால் வழங்கப்பட்ட கடன் அட்டைகளின் மொத்த நிலுவைத் தொகை 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி 6.9 விழுக்காடு உயர்ந்து $17.8 பில்லியனாகப் பதிவானது. அதற்கு முந்தைய காலாண்டில் கடன் அட்டைகளின் மொத்த நிலுவைத் தொகை 9.3 விழுக்காடு அதிகரித்தது.

