நிலையான வளர்ச்சிக்கு உறுதியான அரசியல் தலைமைத்துவம்

நிலையான வளர்ச்சிக்கு உறுதியான அரசியல் தலைமைத்துவம்

3 mins read
c17b2048-0e56-4503-ab11-6c3b91b10dab
ஆளுங்கட்சியினர் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியினரும் மேலோட்டமாக ஒப்புக்கொள்ளும் வகையில் சம்பள உயர்வு இருந்தாலும் கருத்து முரண்களும் இருக்கவே செய்தன.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறிய நாடாகக் கடந்த 61 ஆண்டுகளில் சிங்கப்பூர் அடைந்துள்ள சீரிய வளர்ச்சி எளிதில் கைகூடியதன்று. முன்னோடித் தலைவர்கள் முதல் இன்றைய தலைவர்கள் வரை கொள்கைகளை வகுத்து மக்களை அரவணைத்துச் செல்லும் உறுதியான தலைமைத்துவம் மிக மிக இன்றியமையாதது. 

தனிநாடான பின்னர், பல தலைமுறைகளாக வெற்றிப் பாதையைத் தொடரும் உறுதி முன்னோடித் தலைவர்களோடு நின்றுவிடவில்லை. ஒவ்வொரு தலைமுறை அரசியல் தலைவர்களும் நாட்டுப்பற்று, சமூக அக்கறை, மக்கள் நலன் போன்ற குணநலன்களைக் கொண்டிருப்பதுடன் ஆக்கபூர்வச் செயல்பாட்டாளர்கள், பேரறிவாளர்கள், வல்லுநர்கள் எனப் பல திறனாளர்களையும் சீர்தூக்கிப் பார்த்து, பொறுப்புகளை வழங்கிவருவது சிங்கப்பூருக்குரிய தனித்துவம். 

ஆற்றலுக்கும் கல்வியறிவுக்கும் முன்னுரிமை தரும் நாட்டில் அரசியல் தலைவர்களுக்கும் அது விதிவிலக்கன்று. அந்தக் கொள்கையின் தொடக்கப்புள்ளியாக இருப்பவர்கள் அரசியல் தலைவர்கள். 

கடந்த செவ்வாய்க்கிழமை அரசியல் பொறுப்பு வகிப்போரின் சம்பளம் உயர்த்தப்படுவது குறித்துப் பிரதமர் லாரன்ஸ் வோங், தற்காப்பு அமைச்சரும் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான சான் சுன் சிங் இருவரும் நாடாளுமன்றத்தில் பேசினர். அதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. 

ஆளுங்கட்சியினர் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியினரும் மேலோட்டமாக ஒப்புக்கொள்ளும் வகையில் சம்பள உயர்வு இருந்தாலும் கருத்து முரண்களும் இருக்கவே செய்தன. 

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் உள்ளிட்ட உறுப்பினர்கள், சம்பள உயர்வுக்கான அடிப்படைத் தேவையை ஏற்றுக்கொண்டாலும், சம்பளம் கணக்கிடப்படும் நீண்டகால முறை குறித்துக் கேள்வி எழுப்பினர் . சம்பளம் நிர்ணயிக்கப்படும் முறைகளில் கூடுதல் வெளிப்படைத்தன்மை, அமைச்சர்களின் பணி, அதிகார எல்லைகள் குறித்த தெளிவு அவசியம் என்ற அவர்களின் கருத்து நியாயமானது.

இது இப்போது தேவைதானா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் இதற்குச் சரியான தருணம் என்று இருக்கமுடியாது என்பது எதிர்வாதம். எப்போது இந்த மாற்றம் நடந்தாலும் விவாதங்களும் கருத்துகளும் பரிமாறப்படுவது முன்வைக்கப்படவே செய்யும். அதனை இந்த அரசாங்கத் தவணையின் முதற்பாதியிலேயே செய்தது, அதுவும் பிரதமராக முதல் தேர்தலைச் சந்தித்து வெற்றிபெற்றபின் அமைத்துள்ள அமைச்சரவையின் முதல் கட்டத்திலேயே செய்தது, திரு லாரன்ஸ் வோங்கின் உறுதியான தலைமைத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. 

சிங்கப்பூரின் அரசியல் களம் திறனாளர்களைக் காந்தம்போல ஈர்க்கும் தன்மையை என்றும் கொண்டிருக்கவேண்டியுள்ளது. சிறிய நாடாயினும் வலுவான, அளவில் பெரிய, சக்திவாய்ந்த நாடுகளும் உறவுகொண்டாட விரும்பும் நாடாக, அனைவரும் மதிக்கும் நாடாக இருக்க, செயல்வல்லமைமிக்க தலைவர்கள் தேவை. 

அதற்கு, ஆற்றல்மிகுந்தோர் அரசியலுக்கு வருவதை இலகுவாக்கும் வழிகள் வேண்டும். 

அரசியல் சேவை என்பது ஒரு பொறுப்பு. பொதுமக்களின் கடுமையான விமர்சனங்கள், எதிர்பார்ப்புகளைச் சுமந்து செயல்படுவது சவாலானது. போட்டி கடுமையாகும் அரசியல் சூழலில் வேலை உத்தரவாதம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே. ஒவ்வொரு முறையும் தேர்தலில் வெற்றிபெற்று வேலையைத் தக்கவைத்துக்கொள்ளும் நெருக்கடியும் உண்டு. மாறாக, தனியார் துறையில் தலைமைத்துவப் பொறுப்புகளில் இருப்பவருக்கு இந்த நிலைத்தன்மையற்ற சூழல் இருக்காது. 

அத்துடன், ஒழுங்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிங்கப்பூரில் அரசியல் தலைவர்களின்பால் வைக்கப்படும் எதிர்பார்ப்புகள் அதிகம். தூயவர்களாக இருப்பதில் எந்த விதிவிலக்கும் இருக்கமுடியாது. அண்மைய ஆண்டுகளில் நடந்துள்ள சில நிகழ்வுகளே அதற்குச் சான்று. லஞ்ச ஊழல் தொடங்கி, பொறுப்பற்ற நடத்தை என்று எந்தக் கறுப்புப் புள்ளியும் இல்லாத அரசியல் தூய்மை எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் சம்பளத்தின் ஈர்ப்பே ஒருவரை அரசியலுக்கு இழுக்கும் என்பதில் உடன்படமுடியாது. சம்பளம் என்பது ஒருவர் அரசியலுக்கு வருவதைத் தடுக்காமல் இருப்பதற்கே இத்தகைய முறை. சம்பளத்தைவிட, சிங்கப்பூரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு வலுவான தலைமைக் குழுவை உருவாக்குவதே தற்போதைய சவால்.

சம்பள உயர்வு என்ற ஒரு புள்ளியில் தொடங்கி, சிங்கப்பூரின் எதிர்காலத் தலைமைத்துவம் குறித்த விவாதமாக மட்டுமல்லாமல் அக்கறையாகவும் இதனைக் கருத வேண்டும். 

சம்பளத்தை நிர்ணயிப்பதற்கான முறையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சிங்கப்பூரின் எதிர்காலத் தேவைகளுக்குத் தகுதியான தலைவர்களைத் தயார்ப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம், எதிர்த்தரப்பினர், மக்கள் என அனைவரும் உணர்ந்தே உள்ளனர். 

அடுத்த தலைமுறைத் தலைவர்கள் சிக்கலான உலகச் சூழலை எதிர்கொள்ள ஒரு தகுதியான அடித்தளத்தை அமைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படவேண்டும்.

குறிப்புச் சொற்கள்
அரசியல்தலைமைத்துவம்சம்பளம்வளர்ச்சி